வெறுப்பு விசம்

வெறுப்பை…
கொடிய விசந்தன்னை நாகமொன்று
மிரட்டுகிற பாணியிற் படமெடுத்து
மிகச்சீறி
உமிழுவதைப் போல
உமிழ்ந்தாய் நீ என்மீது!
உனக்குப் பிடிக்காத எனக்கு மிகமிகவும்
அவசிய மான ஒன்றை..
நான் செய்ததற்காய்
வெறுப்பைக் கொடிய விசமாக என்மீது
சொரிந்தாய் தொலைவிருந்து!
என்மீதாம் கோபத்தை
இன்னொரு உயிர்மீது காட்டி..அதைத் தண்டித்தாய்!
வெறுப்பு விசம் என்மீது
துளித்துளியாய்ச் சுவறி
எரியவைத்துத் தோலை ஊடுருவித்
தசைபுகுந்து
தசையை இறுகவைத்து
இதயத்தை உறையவைத்து
நொருக்கி…
சுருண்டு துயின்றிருந்த கோபத்தைக்
கிளறியெனை உசுப்பிக் கிளம்ப
கட்டுப்பா(டு)
இழந்தேன்: தடம்புரண்டேன்!
நல்லபாம்பின் கொடியவிசம்
கொல்லும் ஒருகணத்தில்:
இந்த வெறுப்பு விசம்
கொல்லாமல் உயிரோடு கூறுபோடும்
என்னைநிதம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply