பனைக்கு நிழலில்லை பார்
நானும் என்செய்வேன்?
பனைதான் எம்முன் இருக்குமரம்.
பயன் நூறு
பனையில் இருந்தாலும்
நிழலுக்கதென் செய்யம்?
பனைக்கு நிழலிலாமை
பாரிய துரதிஸ்டமென்றாய்..
பனையூரில் வாழ்ந்து பழகிய என்தோழி!
உனக்கு வெளிநாட்டுப் ‘பைன்’நிழலா
வேணுமடி?
‘பைன்’மரத்தில் ஒருவேளை
நிழலுனக்குக் கிடைக்கலாந்தான்…
‘பைன்’மரத்தால் வேறு பலனுண்டா
சொல்லடிநீ!
பனையெம்மூர் வெயில்முழுகிக்
கறுத்த பெரும்முரடு.
பனைக்குக் கவர்ச்சியில்லை
பட்டிக்காடதன் உறவு.
‘பைனே’ பனித்தேசப் பளபளப்பில்
தளதளென்று
கவர்ச்சிக் கனிகாய்த்துக்
குலுங்குகிற மெல்லழகு.
இவையிரண்டில் ‘பைன்’மரமே
இதமென்று முடிவெடுத்து
‘ஏன்அதனின் நிழல்சேரத் தவறிவிட்டேன்’
எனநொந்தாய்
தோழி? அதன் நிழல் தேடி
இங்கிருந்து போனோரில்
பொறாமைகொள்வதா நீதி?
அங்குபோன நம்மவர் நம்
பனைநிழலின் சுகத்துக்கு ஏங்கித்
தவித்திருந்தும்
‘பைன்’நிழலே பெரிதென்று
விதிவசத்தால் செப்பிடலாம்…
இதைவிளங்க வேண்டும் நீ!
பனைஎமது பரம்பரையின்
‘வரலாற்று வரம்’ உணர்ந்து
அதன்வலிமை பெற்றெழுந்து
வறுக்கும் எவ் வெயிலிடையும் வாழும்
சுகமறி நீ!