இதயத்தை அறுத்து எடுமின்கள்

இதயத்தைக் கல்லாக்கி இருக்கின்றோம்
உயிர்ததும்பும்
இதயத்தைக் கல்லாக்கித் தான் நாம்
கதையளந்தோம்.
இதயமொரு கல்லாகிக் காலம் பலவாச்சு!
இதயம் துடிக்க மறந்துநா ளாகிறது!
இதயமொன்று இருப்பதனை மறந்துமே நாமிருக்க
இதயக்கற் பாரமோ
எமக்குச் சுமையாகி
நாம்நடக்க முடியாமல் நங்கூரம் பாய்ச்சிடுது!
மரத்த இதயக்கல்…உணர்ச்சி எதனையுமே
அறியா அடிமைகளாய்
எம்புலனை மாற்றிடுது!
எண்திசையும்… மெய்யாய் இடிவிழுந்து கருகுவதைக்
கண்டும் அதைப்பற்றிக்
கவலை எதுவுமற்று
தின்று குடித்துத் திரியப் பழகியாச்சு!
கொடுமைகளைக் கண்டும்
குமுறா தொடுங்கியாச்சு!
அடக்கும் குரல்வளையை
அதட்டித் தடுக்க
முடியாத இந்த உணர்ச்சியற்ற இதயத்தை
சத்திர சிகிச்சைசெய்து பிடுங்கித்
துடிதுடிக்கும்
தசையிலான இதயத்தைப் பொருத்த
என்ன விலையெனினும்
தரத்தயாராய் வைத்துள்ளேன்:
சத்திர சிகிச்சைசெய்யத்
தயாரென்ற வைத்தியரைச் சந்திக்கத்
தேடுகிறேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply