காரணக்கல்

கவிதைக் குளத்தில் கல்லெடுத் தெறிந்திருக்க
கல்விழுந்த இடம்கலைந்து
வளையம் வளையமாக
கவிஅலைகள் பரவிற்று!
பரவிய கவிஅலைகள்
காற்றின் இதழ்களினால் கவனமாக
ஒவ்வொன்றாய்
பிரதி எடுபடப் பிறந்தவைகள்
காற்றினிலே
உயிர்பெற்று உலவத் தொடங்கின!
வண்ணத்துப்
பூச்சிகளும் சிட்டுகளும் புறாக்களும் கூடி..அக்
கவிதைகளின் வாசத்தில்,
கருக்கொண்ட தேன்துளியில்,
மகரந்த மணிகளில்,
எதையெதையோ எடுத்துச்
சுவைத்தபடி சந்தோஷமாய்ச் சூழ்ந்து சுற்றியன.
இப்போ குளமெங்கும்
இந்திர லோகமாக
அற்புதம் ததும்பிற்று.
அனைத்துக்கும் காரண..அக்
கல்ஓர் துறவியென
குளத்தடியில் ஒதுங்கிற்று.
எனக்கும் அக்கல்லுக்கும் என்னஎன்ன வேறுபாடு
எனக்கேட்டேன்:
‘எதுவுமில்லை’ எனும்பதிலே
எனக்குள்ளே
கேட்கிறது!
எனைச்சூழ்ந்து வண்ணத்துப் பூச்சி,புறா
சிட்டுகளும் எதையெதையோ
சேர்த்துக் கொண்டேகிடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply