கனவுகள் நனவில் வேண்டும்.
கவிதைகள் கணமும் வேண்டும்.
மனதினில் இரணங்கள் மாறி
மல்லிகை மலர வேண்டும்.
நினைவெலாம் நிறைய வேண்டும்.
நிம்மதி நிலைக்க வேண்டும்.
இனமதம் சாதி என்ற
இலக்கணம் தகர வேண்டும்.
துயரங்கள் தொலைந்த தென்று
துள்ளிய வாய்கள் மூடி
பயமற்றுச் சிரிக்கு முன்பே
பாயெலாம் இரத்த வாடை!
உயிர்ச் செடி தழைக்க என்று
ஒளிதேட…,இருளோ சூழ்ந்து
உயிர்க்கரு கருகச் செய்தால்
உணர்ச்சி வென்றிடுமா இங்கு?
காவலின் வேலிக் குள்ளே
களவுகள் மலிந்தால்…வேலிக்
காவலின் அர்த்தம் என்ன?
காவலின் பயனும் என்ன?
காவலே எம்மை மேயும்
கதையை யார்யார்க்குச் சொல்ல?
காவலே இல்லா வாழ்வே
கனவாகி வருது மெல்ல!