கவிஞன் இவனுக்குக் கட்டளை இடுவதுயார்?
கவிஞன் எழுதுவதைக் கையால்
மறிப்பதுயார்?
‘கவிஞா இதைத்தான் கவியாக்கு’
எனச் செடிலைப்
பிடித்துத் தமக்கேற்ப ஆட்ட நினைப்பவரார்?
என்னிடம் அனுமதி எடுத்தே
எழுதுவது
உன்கடமை என்று
உறுக்குகிற ஆழ்பவரார்?
கவிஞன் இவனுக்கே கட்டளை இடுவதுயார்?
கவிஞனை ஏதோ…
கைக்கூலி,எடுபிடி,
எனஏய்த்து மேய்ப்பவர்யார்?
எவராய் இருந்தாலும்
இவர்களது பேச்சு ஏச்சு உறுக்கலுக்கும்
பணியாது..
அடங்கிப் படுக்காது கவிஞனுளம்!
எவர்க்கும் அடிமையற்று,
எவரையும் அடிமையாக்கும்
மனமுமற்று,
வாழும் மண்ணில் சுயம்பாக…
நிமிரும் சுயக்கவிஞன் எவர்க்கும் அடங்கானாம்!
தனக்குச் சரியென்ற
தர்மத்தை எடுத்தியம்ப
எவரின் அனுமதிக்கும்
ஏங்கிக் கிடக்கானாம்!
உடலைச் சிறையிடலாம்ளூ
அவனுள்ளச் சிந்தனையை
தடுக்க நினைப்பவர்க்குத் தலைவணங்க மாட்டானாம்!
கவிஞன் சுதந்திரக் காற்றுளூ
கனற்கங்கு!
இதனை அறியாது…
கையிரண்டில் விலங்கிட்டு,
வாயினிலே பூட்டிட்டு,
உடலைச் சிறையிலிட்டால்
பொறுக்காது இப்பூமிளூ ஏனென்றால்
கவிஞனொரு
இயற்கையின் குறியீடு!
இயற்கை அவனுக்குத்
துணைநின்று ஏவல்செய்யும் துரோகம் புரியாது!
தன்பிரதி நிதியை,
தனதடையாளந் தன்னை,
தன்னுணர்வை மொழிபெயர்க்கும் தலைமகனை,
பெறுமதியே
கணிக்க முடியாக் கவிஞனை
அடக்குவோரை
செல்லாக்கா சாக்கிவிட்டுச்
சிரிக்கும் வரலாறு!