(30.10.1995 நிகழ்ந்த வரலாறு காணாத ‘வலிகாம இடம்பெயர்வைத்’ தொடர்ந்து இடம்பெயர்ந்து பளையில் இருந்தபோது 02.01.1996 அன்று எழுதியது)
அம்மா தமிழ்த்தாயே! அகிலத்தின் எழிலரசி!
பம்மாத்தால் அன்றிப் படைப்பலத்தால் ஆண்டவளே!
முச்சங்கம் கண்டும்.
மூப்புநரை காணாது
தற்சமயம் கூட தளிர்த்தொளிரும் நித்திலமே!
நச்சரித்து நின்னை நசிக்கப்
படைநடத்தும்
நச்சுக்களின் நாடி நரம்பறுத்து
வரலாற்றில்
துச்சமென நின்று துணிந்து
வருபகைத்தேர்
அச்சுப் பொடியாக்கும் அதிசயமே!
உன்ஈழ
எச்சம் சுமந்த இடர் கொஞ்சம் கேள்தாயே!
உச்சவிலை கொடுத்தோம்.
உருக்குலைந்தோம்.
கட்டிநின்ற
கச்சையுடன் வந்து கதியிழந்து நின்றின்று
பிச்சையரைக் காட்டில்
பெரிய இழிவுற்றோம்.
நேற்றைய நினைவு நெடுமூச்சாய் விரியுதம்மா.!
காற்றை வெறித்துக் கண்சொரிந்து நிற்குதம்மா.!
“என்னென்று…
எல்லாம் இதற்குள் நடந்த”தென்று
எண்ணம் எரிக்க இதயம் சிவக்குதம்மா.!
‘ஒக்டோபர் முப்பது’ எம் உருவினையே மாற்றி விட்ட
முக்கிய நாள்;
எங்கள் முதுசத்திற் கொரு துயர்நாள்.:
கனவிலும் நினையாத ஓர்கரிநாள்:
வழிவழியாய்
பல்லாண்டு பாடி பாறாமல் அரசாண்ட
எல்லாமும் வாடி இடம்பேர்ந்த ஓர் கொடுநாள்:
வரலாறு காணா வதைநாள்:
வலிகாமம்
மறந்திடவே முடியாத மாற்றம் ‘கனத்தநாள்’:
‘ஒக்டோபர் 30’ எம் உருவினையே மாற்றிவிட்ட
முக்கியநாள்!
அந்த முற்றுகையின் சிறையுடைத்து
அக்கரையைத் தாண்ட அரைநாள் கலைந்தசனம்
‘செம்மணித் தெரு’தேடித் திரண்டதுவாம்.
மூச்சுமுட்டி
‘முத்திரைச் சந்தி’வரை முழுச் சனமும்
புரண்டடித்து
நெத்தி வியர்க்க நெடும்பயணம் போனதுவாம்.
எள்ளுவிழ இடமின்றித் தெருமறைய
நத்தையென
நள்ளிரவில் மூழ்கி நகரூர்ந்து சென்றதுவாம்
‘வெய்யில் விழுந்த பிள்ளையாரின் வீதி’ மட்டும்
கையில் அகப்பட்ட கனவோடசைந்த சனம்
‘கைதடியைத்’ தழுவ இருகாலை கரைந்ததுவாம்.
பேயுலவும் ‘செம்மணியின்’ பிணக்காட்டில்
குலைநடுக்கும்
நாயூளைக்கும் அஞ்சா நதிச்சனங்கள்
பிணச்சாம்பல்
கால் தடவ வயலைக் கடந்தும் நடந்ததுவாம்.
இடுப்பளவு சேற்றில் இறங்கி
செருப்பறுந்து,
உடைகலைந்து முள்ளால் உடல் சிதைந்து,
புண்கொதிக்க
வலி பார்க்க முடியா வேதனையில்
வலுவிழந்து,
“தப்பினால் போது”மென சனமகன்று போனதுவாம்!
கப்பிய இருளில் ‘கடல்’
தரையைத் தாண்டியதாம்!
தின்னக் குடிக்கத் திக்கற்று அழுதபிஞ்சுக்கு
என்ன கொடுப்பதென்று அறியாமல்
அயலுறவில்
தண்ணீரும் வாங்க முடியாமல்…. தாய் தகப்பன்
கண்ணீரால் பால்தந்த கறுமம் நிகழ்ந்ததுவாம்.
அட்டதிக் கிருந்தும் நிலமதிர வந்த சனம்
விட்ட கரப்பையை
தவறிஅழும் விருத்தர்களை
‘கட்டிக் கரியிருட்டில்;’ தடவிக் கதறியாரோ
பெட்டை பெடியளினைப்
பிள்ளையெனத் தொட்டதுவாம்.
சோடி பிரிந்து துணைமாறிக் கைகலந்த
வேடிக்கை வீதி வெளியிலரங் கேறியதாம்.
பட்டப் பகலாய்ப் ‘பரா’ லைட்கள்
வட்டமிட
எட்ட இருந்து இருமும் ‘ஆட்லறி’ ஏவி
விட்டகணை வானில் ‘விதிவிசிலாய்க்’ கூவிவர
“குத்திவிட்டான” “ படு” என்ற
குரலடித்த நெரிசலிலே
பத்துப் பனிரெண்டு பால்குடிகள்…. திணறி ‘விழி
குத்தி’ இறந்ததுவாம்.
குலமிருந்த அவசரத்தில்
செய்வ தறியாது திடீரென்று கைக்கொழுந்தை
‘ஐயோ’ என அலறி…
‘நாவற்குழிப்’ பாலத்து
நீரோ டெறிந்து நேர்ந்த வயிறசைந்ததுவாம்!
தள்ளாடும் பழசை தனிக்கவிட்ட
இளசுபல
சொல்லாமல் ஓடித் தொலைந்து விட…
கண்ணிருண்ட
வயோதிபரின் ஓலம் மழையிடியை மிஞ்சிவர…
கைமாறிப் போன கனகாம்பரப் பூக்கள்
மையிருட்டில் தவித்து அலைய…
நிலமழுது,
கான மணியழுது, கதவடைத்து ஒளியிழந்த
மோனக் கடவுள்கள் முகமழுது,
கலையழுது,
வானழுது வந்த வழியெல்லாம் சேறாகிப்
போனதம்மா, இன்பம் புதைந்ததம்மா!
சைக்கிள்கள்
முன்னாலும் பின்னாலும் பெறுமாதக் கர்ப்பிணிபோல்
என்னென்னவோ எல்லாம் ஏற்றி…
பிரசவத்து
வேதனையால் முனகி விரைவதுபோல்
புண்பட்ட
வீதிகளில் குலுங்கி விலாவொடியப் பறந்ததம்மா!
பகலும் வரண்டு… கானலெனக் கண்பனிக்க,
முகிலும் அழுது
முனகித் துளிகசிய,
நகர்ந்த ‘சனமந்தை’ நனைந்ததம்மா!
ஓர்அடியைக்
கடப்பதற்கு இடையில் கனஉயிர்கள் மாய்ந்ததம்மா!
துடக்கோடு, சாமத்தியம், செத்தவீடு, பிரசவமும்
நடுத்தெருவில் அன்று நடந்ததம்மா.!
மூன்றுதினத்
தீட்டுக் குமர்கள், வலது குறைந்தவர்கள்,
நாட்கணக்காய் பாயில் நரம்பிற்ற கிழவர்கள்,
பத்தியத்தால் வாழ்ந்து பாரம் சுமந்தனுங்கும்
கர்ப்பிணிகள், குஞ்சு குருமான்கள்,
காத்தவரை
முதுகேற்றிக் காவி மூச்சுவாங்கும், இளங்குருத்துக்
காவியங்கள்,
எல்லாம் ‘கைதடியில்’ கால்வைத்து
நீரின்றிச் சாய.. நிலவுகண்டு தேய்ந்தம்மா!
பாட்டும், பகட்டும்,
பரதச் சதங்கை தரும்
ஆட்ட அமைதி அழகுகளும்,
கொலுவிருந்த
கூடு கலைந்து, கொடியறுத்துப் பொட்டழித்து
பாடையிலே ஏறும் பிணமாய்ப் பயணிக்க
பேய் பிடித்த மேடாய் பிதிர்க்காடாய்
வலிகாமம்
சேயகலக் கண்டு சிதிலடைந்து..
வாயுலர்ந்து
முகமிருண்ட தம்மா.!
முழு அழகும் பட்டதம்மா!
கைகாட்டி நின்ற கரும்பனையை கவனிக்க
நேரமில்லா அவதி நிலையினிலே
ஆர்ப்பரிந்து
ரெண்டு கடல் வந்து இணைந்ததென
‘செம்மணியால்’
‘கண்டி ரோட்டால்’ வந்து கலந்ததமிழ்
‘யாழ்வரவை’
புண்பட்ட நெஞ்சால் புணர்ந்து, முத்தமிட்டு,
கண்ணைவிட்டு மறையும் கணம்மட்டும்…
அழுதபடி
பொன்மண்ணை விட்டே புலம்பெயர்ந்து போனதம்மா…!
காற்றும் கரைந்ததம்மா.
காகங்கள் கோழிகளும்
நேற்றிருந்த நேசத்தை நினைத்துத் திரிந்ததம்மா.!
நாய், பூனை, ஆடு, மாடு நாற்றிசையும்
திகைத்தலைந்து
விழிபிதுங்கிச்
சொந்த விரலின் மணம்தேடி
பசியால் உதிர்ந்து ஊதிப் புழுத்ததம்மா!
இத்தனைக்கும் இடையில்,
எரிக்கும் தணல்அருகில்
“என்ன நடந்தாலும் இளகேன்”
எனுந்துணிவில்
கன்னஞ் சிவக்கஓர் கவிஎழுதி..
என்வீட்டில்
அன்றிருந்தேன்.
‘நல்லூர் ஆண்டவனே’ விட்டவழி
என்றெழுந்து சென்று
‘எழுந்தருளி’ முன்னமர்ந்து
“கண்திறடா” என்றேன், கசிந்தழுதேன்.
எனை மறந்தேன்!
ஆனால்…
அதற்குள் அருகருகே ஷெல் விழுந்து
சோனாவரி யாகச் சொரிய,
வீட்டார் தம்
கண்கலங்கி, “போவோமக் கயவரது கைநெருப்பில்
மண்ணாகிப் போவதிலும் மறைந்தொழிப்போம்”
எனக்கிளம்ப
நெஞ்சம் இருண்ட நிலையில்…
நல்லூரும்
தஞ்சம் தவிர்த்த தருணமதில்…
கடைசிமுறை
திருநீறு பூசி திரும்பிப் பலமுறைகள்
“இனிவரும் நாள் எப்போ?” என இழகி
வாய்குளறி
தேரடியில், பக்கத்து ‘மனோன்மணியின்’ சேவடியில்
சிந்தி உருகி,
தெரிந்த என் ஊராரின்
பேயறைந்த பேச்சால் பிசகி…
வீ;ட்டின் முன்
தவிப்புடனே நின்று தளம்பி…
‘பாரதியார்
கவிதைகள்,’ இரண்டு களுசான்கள்,
சில சேட்கள்,
மணிக்கூடு, காசு, டயறி…. மட்டும் கொண்ட சிறு
பையெடுத்து நானும்
பயணம் புறப்பட்டேன்.!
கைநிறைந்த கவிதைகளை கனவுகளை விட்டுவிட்டு
சைக்கிளிலே சோர்ந்து தலைவிறைக்க வெளிக்கிட்டேன்!
கடைசி முறை நின்றென்
தெருக்களுக்குக் கையசைத்துப்
படபடத்து மக்கள் பட்டாளத்திலோர் தூசாய்
கலந்தசைந்தேன்.
எந்தன் கண்கண்ட எல்லை மட்டும்
தலைதவிர ஒன்றும் தெரியவில்லை.
‘நாவற்குழிப்’
பாலம் நிறைந்து பணிந்ததினால்
அருகின் ‘ரெயில்
பாலப்;’ பவனிக்காய்ப் பாய்ந்து..
அங்கேயும்
கால்வைக்க முடியாமல் …
கரையெல்லாம் ஷெல் வெடிக்கும்
ஓலத் திடையே…
“இனி இல்லை வழி” யென்று
‘உப்பாற்றில்’ சைக்கிள் உருட்டி உடல் சிலிர்த்தேன்.
இப்பிறப்பில் காணா இடர்சுவைத்தேன்.
கழுத்துவரை
தண்ணீரில் மூழ்கித் தவித்து,
முற்றாகக்
கொண்டு வந்ததெல்லாம் குளிக்கவைத்து,
அரைமணியாய்
அலைந்துலைந்து,
ஆழம் அமுக்க நிலைகுலைந்து
தளர்ந்து கைகால் மீண்டுயிர்த்து,
தரையடைந்து,
சேறு கழுவிச் சுமைசுமந்த தால் தேகம்
சோர்ந்தமர்ந்தேன்!
என்போல் பலரருகில் துவண்டழுதார்!
உடைகழற்றி உதறி,
மணலில் உலர்த்தியபின்
தலைதுவட்டிக் கொண்டேன்.
சாமான்கள் நனைந்தூறிக்
கனத்ததனால் ஒவ்வொன்றாய் எடுத்துதறிக்
காயவைத்தேன்!
‘பாரதியார் கவிதை’ உப்புநீர் குடித்தழுது
வாந்தி எடுத்த மாதிரியாய்
நீர் சொரிய
நீந்திநின்ற பக்கங்களை நீவி உலரவிட்டேன்.
பாலத்தைக் கடக்கப் பலலட்சம் பேர் துடித்தல்
நீளும் எதிர்த் திசையில் தெரிந்ததம்மா!
தூரத்து
‘வலிகாமத்தின்’ முகமோ
வடிவாய்த் தெரியாமல்
பொலிவிழந்த தென்னை பனையெல்லாம்
புகார்மூடி
தலை துடித்த காட்சி மங்கலெனத் தெரிந்ததம்மா.!
அந்தி, சிவப்பை அணைக்கையிலே
உப்பேரி
சந்தனமும் பூசத் தவிர்த்துக்….
கலங்கி நிற்க..,
ரத்தம் சொரிந்த சூரியனோ….
உயிர் விட்டுச்,
சொத்திப் பனைக்குள் சுருண்டு விழுந்திருள…,
“இனி எப்போ மீண்டும் என் மண்ணில்”
எனக்கலங்கி
நல்லூருக்குப் போகும் நாரைகளை…
“நான் பிரிந்தேன்
சொல்லுங்கள்” என்று தூதுவிட்டேன்!
கண்ணீர்தான்
முட்டியது.
மீண்டும் முன்தெரிந்த ‘யாழ்’மண்ணைத்
தொட்டுவிட விரலைத் தூக்கி,
முடியாமல்
மூட்டையுடன் சைக்கிளை முடுக்கிவிட்டேன்.
தமிழம்மா…!
இன்றிங்கே வந்து இதமிழந்தோர்
மூலையிலே
கன்றிய கவிதைக் காயத்தைத் தடவிவிட்டு,
மன்றாழும் கனவை மனசுள் பதிவைத்து,
பெருமூச்சு விட்டுப், பிதற்றுகிறேன்.
என்போலே
‘ஐந்து லட்சம்’ மக்கள் அதிர்ந்திடிந்தார்.
மீட்சியின்றி
நொந்து சுருண்டு நொடிந்துள்ளார்…
அவர்க்கெல்லாம்
சந்தோசம் வேணும்:
சரியான தீர்ப்பையுன்
மைந்தர் அடைய மடிவிரித்து அருள் காட்டு!
சந்ததியின் சாபம் துடைத்து விடிவாக்கு!
தந்திரத்தால் அல்ல,
தளையுடைந்து வழிகாட்டு!