திரு.சி.ரமேஸ்க்கு எழுதியது

திரு.சி.ரமேஸ்
ஆசிரியர்,
கிளி,பரந்தன் இந்து மகாவித்தியாலயம்,
வணக்கம்,

தமிழ் இலக்கியப் பெருவிழா 2012, ஆய்வரங்குக்காக “1960 களுக்குப்பின் யாழ்ப்பாணத்துக் கவிதைகள்” என்ற தலைப்பில் தங்களால் தயாரிக்கப்பட்ட ஆய்வுக்குறிப்பு அனேகம் எழுத்துப்பிழைகளைக் கொண்டிருந்தாலும் பல கவனத்திற் கொள்ளப்படக்கூடிய விடயங்களையும் உள்ளடக்கியிருந்தது.
எனினும், பக்கம், 11ன் முதலாம் பந்தியில் 2000ற்கும் அதற்குப் பின்னும் வெளிவந்ததாக தாங்கள் சுட்டிக்காட்டிய நூல்களில் எனது கனவுகளின் எல்லை (2001) கைகளுக்குள் சிக்காத காற்று (2004) என்பன வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளதா என எண்ணத்தோன்றுகிறது! இத் தொகுதிகள் வெளிவந்ததது தாங்கள் அறியாததா, அவை கணக்கில் எடுக்கப்பட முடியாத கவிதைத் தொகுதிகளாக “தாங்கள் கருதுகின்றீர்களா? 1990ல் இருந்து ஈழத்தமிழ் கவிதைத்துறையில் கணிசமான பங்கு எடுத்துவரும் என்னை, அண்மையில் கவிதைத்துறையில் காவடி எடுத்துவைத்த இளந்தலைமுறையின் வரிசையிலும் 07 ம் இடத்தில் நிறுத்தி வைக்கின்றீர்கள். இதை விட வேறு குறிப்புகளும் இல்லை.! இது ஓர் இருட்டடிப்பே! இது எமது சாபக்கேடான, (வட்டத்துள் வைத்து) குழுமனப்பான்மையுடன் வேண்டுமென்றே பக்கச்சார்பாக விமர்சனம் செய்யும் “மூத்தவிமர்சகர்கள்’ எனத் தம்மைத்தாமே சொல்லிக்கொள்வோரின் வரிசையில் தாங்களும் இடம்பெற எத்தனிப்பதையே காட்டி நிற்கிறது!.
தங்களைச் சுற்றி இருப்பவர்களை, தங்கள் வட்டத்தை, அணியைச் சேர்ந்த நண்பர்களின் படைப்புக்களை எவரையோ பிரதிபண்ணி எவரையோ திருப்திப்படுத்த எவருக்கும் புரியாமல் எழுதப்படுபவற்றை ‘உச்சங்கள்’ என்றும் ஏனையவர்களையும் அவர்களின் படைப்புக்களையும் ‘அற்பங்கள’; என்றும் எடுத்தறியும் விமர்சகர்களாலும், விமர்சனங்களாலும் கடந்த காலங்களில் எதுவும் நடந்ததுமில்லை வருங்காலத்தில் எதுவும் நடக்கப் போவதும் இல்லை! உண்மையான நல்ல படைப்புக்களை எவரும் இருட்டடிப்பு செய்ய முடியாது நல்ல கவிதைகளை காலத்தின் விமர்சனம் கரையேற்றியே தீரும்.

இவ்வண்,
த.ஜெயசீலன்.