மழையோர் மிகப்பெரிய வீணை..அதன்
நீர்த்தந்தி
தனைக்காற்று மேதை
தனித்துவமாய் மீட்டிவிட
எத்தனை இனியஇசை எழுகிறது?
முகில்களெல்லாம்
மிகப்பெரிய “கட”வித்து வான்கள்..அவற்றினிசை
இடிகளென முழங்கிடுது!
மின்னல்கள் இந்த
இசைமேடை அலங்கரிக்கும்
மின்விளக்குத் தோரணங்கள்!
கச்சேரி களைகட்டக் களைகட்டக்
பூமியதன்
ஆனந்தக் கண்ணீர்
வெள்ளமெனப் பெங்கிடுது!
மனோரதியக் கற்பனையில்
மனதைப் பறிகொடுத்த
வேளை…இந்த மார்கழிக் கச்சேரிக் காலத்தில்
கடலும் தனியா வர்த்தனம் வாசிக்க
அலை புரண்டு தாளமிட
அதற்குள் பலியானோர்
ஒதுங்கினர் சடலமாக என்ற
பெருமோலம்
நெஞ்சைப் பிளக்க
நிஜம் மனதின் தந்திகளை
அறுத்தெறிய..மழை வீணை முகாரியாகக்
கேட்டிடுது!