உண்மைகளைத் தவிர…

உண்மைகளைச் சொல்கின்றோம் உண்மைகளாய்
எனச்சொன்னார்!
உண்மைகள் உறங்கியபின்,
உண்மைகள் அடங்கியபின்,
உண்மைமௌனித்த தன்பின்,
உண்மைக்கு அருகிருந்தோர்…
என்னானார் என்று எவருமறியாப் போதில்,
உண்மைகளை அறிந்தோர் ஊமைகளாய் மாறியபின்,
உண்மைகளைக் கனவிலுங் கூட
அறியாதோர்…,
உண்மைகளை வெகுதொலைவில்
இருந்து எட்டிக் குறையாகக்
கண்டவர்கள்…,
உண்மைகள் இப்படி இருந்திடுமோ
என்றவர்கள்…,
உண்மைகள்முன் பொய்யுரைத்தார் என்றன்று
தண்டிக்கப் பட்டவர்கள்…,
உண்மைகளோ டிருந்து
உண்மையாக வாழ முடியா தொதுங்கியோர்கள்…,
உண்மைகளைப் பொறுக்காது
உண்மைகளை மறைப்பதற்காய்
உண்மைகளை வெறுப்பதற்காய்
உண்மைகளை ஒழிப்பதற்காய்
உண்மைகளின் பகைவராம்
பொய்களோடு கூடியோர்கள்…,
உண்மைகளின் பகைவர்களின் உதவியினால்
உய்தவர்கள்…,
உண்மைகளைச் சொல்கின்றோம் உண்மைகளாய்
எனவந்தார்!

உண்மைகள் உறங்கியதால்,
உண்மைகள் அடங்கியதால்,
உண்மைமௌனித்த தனால்,
உண்மைக்கு அருகிருந்தோர்
என்னானார் என்று எவருமறி யாததனால்,
உண்மைகளை உணர்ந்தோர் ஊமைகளாய் மாறியதால்,
உண்மைகளை மறைப்பதற்காய்…
உண்மைகளைத் தவிர்ப்பதற்காய்…
உண்மைகளைப் பழிப்பதற்காய்…
உண்மைகளை அழிப்பதற்காய்…
உண்மைகளின் பகைப்பொய்கள் வாழ்வதற்காய்
வெல்வதற்காய்
உண்மைகளைச் சொல்கின்றோம் உண்மைகளாய்
எனச்சொன்னார்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply