பாடும் மீன் பட்டங்கள்

நீல நிற, தெளிந்த வானோர் நெடுங்கடலாம்!
கோல முகில்கள்
அதில் அலைகளாய்க் குமுறும்.
வானத்தில் பட்டங்கள்
வாலசைத்து மீன்களென…
ரீங்கார ‘விண்’இசைத்து திக்கை நிறைத்துளன!
பெரிய திமிங்கிலங்கள்,
பெரிய சுறா திருக்கை,
நிறைய நடுத்தர வகைகள்,
பலதினுசாய்
உருவங்கள் வேறாய் ஒளிருபவை,
இடைக்கிடை
சிறிய திரளிவகை, என்று
வால் அசைத்தசைத்து
மீன்களாய்ப் பட்டங்கள் மிதந்துளன!
ஒன்றிலொன்று
நீளத் தொடுத்தோர் நிரையான மீன்கூட்டம்
போலச் சில…வானப்
பூக்களாய்ப் பூத்துளன!
மீன்பாடும் பாடல்கள் கேட்கலைநான்.
இந்த விண்
மீன்களெனும் பட்டங்கள் ‘விண்’பாடச்
சிலிர்த்தேன்காண்!
மீண்டும் வான் பார்க்கின்றேன்….
விரைவாக வாலசைத்து
நீந்த முயன்று நூல்முனையிற் கட்டுண்ட
மீன்களெனப் பட்டங்கள்
காற்றலே திமிறி
ஆர்த்துளன!
இவற்றின் தவிப்பை உணர்கையிற்தான்…
“பாடலென நாம்கருதிக் கேட்பவை
இவற்றினிடர்
ஓலங்களோ”…திகைத்தேன்!
நூற்தூண்டில் தனிற்சிக்கிப்
பாடுகிற பட்டங்கள் தனைப்பார்த்து…
உயிருள்ள
மீன்களது சுதந்திரத்தின்
பெறுமதியைப் புரிகின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply