நீதி நிஜமாய் உதிக்காத காலையில்,
நியாயம் நம்மை நெருங்காத வேளையில்,
சோகம் யாவும் வடியாப் பொழுதில், நம்
சோதரர் துயர் முடியாக் கணத்தில், எம்
வீடு-பேறும் விளங்கா நிலையில், ஊர்
விதி; எதிர்காலம் புரியாக் களத்தில், ‘தை
மாது’…மட்டுந்தான் நமக்குத் துணையாக
வருகிறாள்! அவள் கைகளைப் பற்றுவோம்!!
“தை பிறந்திடில் வழியும் பிறந்திடும்”
தமிழர் நம்பிக்கை இவ்வாண்டும் நீளுது!
பொய்கள், வேடப் புனைவு, கலைந்தெங்கும்
புது ‘மெய்’ பூக்காதோ நெஞ்செலாம் ஏங்குது!
“மையிருள் துடைப்பான், மழை நல்குவான்,
மண்மலர்த்துவான் சூரியன்” நம்பியெம்
மெய்கள் பொங்குது! “மண்ணில் வசந்தமே
வீசட்டும்” என்றெம் வாழ்க்கையும் நேருது!