காத்திருக்கும் பூதங்கள்

எங்கே இடறலாம் எனறெங்கள் கால்களையே
எங்கோ இருந்தபடி
பார்த்துளன சிலகண்கள்.
எப்போதெம் கைநழுவிக்
கையெழுத்துப் போடுமென்று
வெற்றுத்தாள் கொண்டெம்பின்
தொடர்ந்துளன சிலதலைகள்.
எங்களது பேச்சில்,
எங்கள் எழுத்துக்களில்,
எப்போ பிழைபிடித்து எமைத்தூக்கில்
ஏற்றிடலாம்
என்று துடித்துளன அரூபக் கொடுங்கரங்கள்.
எப்படி எம்மடியை எம்கடலை
அடாத்தாக
அபகரிக்கலாம் என்று
அனுதினமும் திட்டமிட்டு
தெளிவாகக் காய்நகர்த்தல்
செய்யும் உயர் பீடங்கள்.
எங்கள் அடையாளம் எங்கள் தனித்துவத்தை
கொன்று புதைக்கக்
கூட்டணி சேர்த்தபடி
சந்தர்ப்பம் பார்த்துத் தவித்துளன
துவக்குக்கள்.
எங்கள் இருப்பில்
இடையறாது தம்பிடியை
இறுக்க முயன்றுளன மேலாதிக்கத் திமிர்கள்.
எமைத்தறிக்க எம்முள்
கோடரிக் காம்புகளை
உருவாக்க முனைந்து
ஜெயித்துளன தேவதைகள்.
இவ்வகையாய்க் கொடிய
மழைமுகில்கள் சூழ்கையிலே
இவைபற்றி எந்தச் சலனமும் இல்லாதுளூ
இவைபற்றி அறிந்தும் அறியாதுளூ
இக்கணமும்
தங்கள் தங்கள் பாடுகளைப்
பார்க்கிறார்கள் எம்மக்கள்!
கவலை சிறிதுமற்று
களித்துளார்கள் ‘அவர்மக்கள்!’

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply