நீதொழுத கைகளுக்குள் நின்றதொரு கூர்வாள்!
நீசிரித்த சிரிப்புள்ளே
ஒளிர்ந்ததொரு தீயஎண்ணம்!
நீபார்த்த பார்வைக்குள் நிழலாடும் பகைமைத்தீ!
நீஅழுத கண்ணீரில்
கரைந்ததெனைக் கொல்லு(ம்)விசம்!
நீசொன்ன சொற்களுக்குள்
நெருடிற்றடா வஞ்சம்.
நீசெய்த அன்பினுள்ளும் நீண்டதடா பகைமை.
மனத்தாலே நட்பின்றி
மனத்துள் பகைமூட்டி
மனத்துள் எனைத்திட்டி வாயால் எனைவாழ்த்தி
இன்றும் அருகமர்ந்து
ஏதேதோ பேசுகிறாய்!
“நன்றெமது நட்பென்பர்” நமைப்பார்ப்போர்:
எச்சரிக்கை
கொண்டுன் ஒவ்வொரு அசைவையும்
கூர்ந்துபார்த்து
உன்னைத் தெளிந்ததனால்…
உனக்கு முகங்கொடுத்தேன்!
உன்னைப்போல் புறத்தில் நட்புதனைப் பாராட்டி,
உன்னைப்போல்
உன்னை என்னுள் புறக்கணித்து,
என்னை வழிநடத்தி
என்தோல்வி தவிர்க்கின்றேன்!