இன்று “ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் பண்பாடு” என எம் தமிழ் இளைய தலைமுறையே விழிப்படைந்து போராடியது வரலாற்று நிகழ்வாகிவிட்டது. இது நிச்சயமாக பாராட்டப் படவேண்டியது. இப்போதாவது எமது தனித்துவ அடையாளங்களை இன்றைய இளைய தலைமுறை உணர்ந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் ஜல்லிக்கட்டு மட்டும் தான் எமது பாரம்பரியமா ? மரபுரிமையா ? இது போன்ற எத்தனையோ எமது தனித்துவமான மரபுரிமைகளை நாமெல்லோரும் மறந்து அல்லது தொலைத்துவிட்டல்லவா வாழ்கிறோம். அவற்றையும் தூசு தட்டி மீட்டு எடுக்கவேண்டாமா?
இன்றைய இளைய தலைமுறையினர் உலகமயமாதலின், இன்றைய நவ நாகரீகத்தின், மடியில் பிறந்து வளர்ந்தவர்கள். உலகமயமாதல் என்பது ஒவ்வொரு சமூக, இன, மத,மொழி அடையாளங்களையும் தனித்துவங்களையும் தகர்த்து அல்லது சிதைத்து ஒரே வழியில் ஒரே திசையில் உலகை கொண்டுசெல்ல, எங்கோ இருப்பவர்களின் இயல்புகளை மற்ற எல்லோரும் பின்பற்ற வைக்க, தன்னாலான சகல முயற்சிகளையும் எடுத்து வருவது கண்கூடு.
ஜல்லிக்கட்டில் பண்பாடு பாரம்பரியங்களை பாதுகாக்க போராடும் இளையவர்களில் எத்தனைபேர் எமது உடை, உணவு ,பானம் , பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறைமைகள் , எமது இசை, எமது கவிதை, எமது நாடகம், எமது மரபிலக்கியங்கள், எமது ஓவியம், எமது மரபுக்கலைகள் என்ற எமக்கே உரித்தான, நீண்ட வரலாறுடைய, தனித்துவமானவற்றை , எமது உண்மையான மரபுரிமைகளை, பின்பற்றுகிறார்கள்? போற்றுகிறார்கள்? வளர்க்கிறார்கள் ?
கால மாற்றத்துக்கேற்ப நாமும் மாற வேண்டும் என்பது நிச்சயமானது தான். புதுமைகளை நவீனங்களை உள்வாங்க வேண்டும் தான். ஆனால் இன்றைய இளையவர்களில் அநேகமாகமானவர்கள் முழுதும் புதுமைவாதிகளாகி, நாம் யார் என்பதை முற்றாய் மறந்து போய், உலகமயமாதலின் விளைவுகளான நவீன உடை, உணவு, பானம் ,வாழ்க்கைமுறை, இசை, கவிதை, நாடகம், ஓவியம், இலக்கியங்கள், கலைகள் என்பவற்றுக்கே (அவை இம்மண்ணுக்கு, எமது கலாசாரத்துக்கு பொருந்துமோ பொருந்தாதோ அதைப்பற்றி கவலையின்றி) முதலிடம் வழங்கி, உலகமயமாதலின் அரசியலுக்கு துணைபோய், எமது தனித்துவ அடையாளங்கள் மரபுரிமைகளுக்கு இரண்டாம் இடமே தந்து அல்லது அவற்றை முற்றாய் புறக்கணித்து , அவை பற்றிய அறிதல் புரிதல்கள் அற்று, அவற்றைப் பழித்து இழிவுசெய்து, உலகமயமாதலின் பின்னணியில் இயங்கும் பலதேசிய வணிகர்களின் பாராட்டை விருதுகளை பெற்று, அல்லது அவற்றுக்காக முயன்று “நாங்களும் அவர்கள் போல் தான்” என்று மகிழ்கிறார்கள். பெருமிதம் கொள்கிறார்கள், அவைதாம் எமது அடையாளங்களும் என சொல்லவும் பின்பற்றவும் முனைகிறார்கள். இதுவே யதார்த்தம்.
இந்த நிலை மாற வேண்டும். ஜல்லிக்கட்டில் எம் பண்பாடு பாரம்பரியங்களை விட்டுக் கொடுக்காமல் காத்தது போல எமது மரபுரிமை அடையாளங்கள் கொண்ட, எமது தமிழ் மண்ணுக்கு பொருத்தமான, எம் தமிழ் வாழ்க்கை முறைமைகளுக்கு ஏற்ற , சகல விடயங்களுக்கும் முதலிடம் கொடுக்க முனைய, பழக, வேண்டும்.
எமது நீண்ட தொடர்ச்சியான வழிவழிவந்த பழக்கவழக்கங்கள், வாழ்வியல் முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள், கலை வடிவங்கள் என அனைத்துக்கும் முக்கியத்துவமும், முதலிடமும் தர வேண்டும்.
அதுதான் எம் அடையாளங்களை காத்துநிற்கும்! நாம் தமிழர்கள் என தலைநிமிர்ந்து சொல்லவைக்கும்!
ஜப்பானியர்கள் தம் தனித்துவங்களுக்கே முதலிடம் கொடுத்து உலகமயமாதலுக்கும் முகம் கொடுத்து வென்று நிற்பதனை நாமும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.
செய்வோமா ?