உனக்கு… எந்தன் கவிபிடிக்க வில்லை என்றாய்.
உன்கணிப்பில்… என்கவிதை மட்டம் என்றாய்.
உனக்கு…எந்தன் கவிவடிவம் தூரம் சொன்னாய்.
உனக்கு… எந்தன் கவிக்கொள்கை கசக்கும் என்றாய்.
உனக்கு… எந்தன் கவிப்பொருளோ “குப்பை” என்றாய்.
உனக்கு… எந்தன் கவிதையெல்லாம் “கழிவே” சொன்னாய்.
எனக்கொன்றும் ஆகாது! உனக்காய் மட்டும்
எழுதவில்லை நான்…கவலை கொள்ளேன்: கேளாய்!
உனைப்போன்ற ஒருசிலர்க்குப் பிடிக்க வில்லை!
உனைப்போன்ற சிலர் எனையும் ஏற்க வில்லை!
உனைப்போன்ற சிலர் என்னைக் கவிஞன் என்றே
உரைப்பதில்லை என்பதற்காய்க் கவலை கொள்ளேன்!
எனை, எழுத்தை ‘உமக்கு’ அடைவு வைக்கேன்! அஞ்சி
எழுதாது ஊமையாகேன்…உடைந்தும் போகேன்!
எனை, எந்தன் கவியை இந்த உலகில் யாரும்
ஒருவனேற்க உள்ளவரை…படைப்பேன்: ஓயேன்!