தொடரும் களவு

காற்றும் பலசமயம் களவாடப் படுகிறது.
காற்றினிலே அன்னிய மொழியும்
அதன்மதமும்
எங்கள் குரல்களையும்
மேவி ஒலிக்கையிலே
காற்றும் பலதடவை களவாடப் படுகிறது.
கடலில் எமதான கடலில்
எவரெவரோ
வீம்புக்கு வந்துவலை வீசி..
வழித்தெடுத்து
மேம்பாடு காண விழிபிதுங்கி வயிறுகாய்ந்து
கையைப் பிசைந்து
கரையில்நாம் வீழ்கையிலே
கடலும் சிலசமயம் களவுபோய் விடுகிறது.
நிலமோ நேற்று வரையும்
அடையாளம்
தொலைத்தும் தொலையாதும்
துணிந்து கிடந்ததுதான்!
என்ன அழிவுகண்டும்
இறந்து மறையாது
தன்னைப் புதுப்பித்துத்
தப்பி இருந்ததுதான்.
இன்று அதிலும் இடியே இறங்கிற்று.
எங்கள்முப் பாட்டனிடம்
இருந்த பனங்காணி
துண்டாடப் பட்டு
எங்கிருந்தோ வந்து ‘நாம்
சொந்த’ மெனச் சொன்னவர்க்கா
தாரைவார்க்கப் படுகிறது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply