சாய்ந்துதான் போனது தலைமுறை தலைமுறையாய்
வேரோடி விழுதெறிந்து நின்ற
குலவிருட்சம்!
சாய்ந்ததுதான் தாமதம்…
தடதடென்று கிளைகளினை
யார்யாரோ வந்து பங்குபோட்டு வெட்டிவிட்டார்!
வரிசை வரிசையாய் வாகனங்கள்
அவரவரின்
விறகுக் கிளைகளினை
மீட்டுக்கொண் டேகிற்று!
பிரதான தண்டை அடிமரத்தை
யார்யார்தான்
உரிமையினைக் கோருவது என்ற இழுபறி
முடியத்…தமக்குள்ளே
ஏதேதோ விட்டுக்
கொடுப்புக்கள் செய்து கொடுப்புள் சிரித்து
நகர்ந்தார்கள் வீழ்த்தியோர்கள்…!
“வேரையும் கிளப்புங்கள்
இருந்தால் ஒருநேரம் தளிர்த்திடலாம்”
எனும்கூச்சல்
கிளம்ப வேர்தோண்டும் படலம் தொடங்கிற்று!
சாய்ந்த விருட்சத்தால்
தோன்றிய பெருவெளியை
சாய்ந்த விருட்சத்தால் தோன்றிய
வெற்றிடத்தை
யார்தான்? எவ்வாறு? எதைநட்டு
நிரப்புவது?
யார்தான் தொடங்குவது?
யார்தான் தொடருவது?
யார்க்கும் கவலையில்லை…
யதார்த்தம் அழுகிறது!