வேலியற்ற நிலம்.

கண்டகண்ட கால்நடைகள்
கடப்பில்லா வேலிதாண்டி
நின்று அனாயசமாய் நினைத்தபடி எதையெதையும்
மேய்கின்ற மேய்ச்சல் தரவையாச்சா
நமதுநிலம்?
அன்றொருநாள் நல்ல
அறுக்கையான வேலி சூழ்ந்து
கன்று பயிரை
காபந்து பண்ணிற்று!
கடப்பைத் திறந்துமூடக்
காவலாளி இருந்ததனால்..
நடவினிலே எவ்விலங்கும் நடமாட முடியாது.
பயிர்கள் மதாளித்துப்
பார்வைக் கினிமையாச்சு.
உயிருழைப்பின் மெய்விளைவை
மனது இரசித்ததன்று.
இன்றோ நிலமை எல்லைமீறிப் போகிறது.
கண்முன் நடந்த களோபரத்தில்
காவலாளி
கோடாலி பட்டுக் கொலையானார்.
கடப்பினுக்கு
யாரும் பொறுப்பில்லை…
யாவையும் நுழைந்தனவாம்.
வேலி எதற்கென்று வினவினர் வந்துபோனோர்.
கண்டகண்ட கால்நடைகள் கால்வைத்து
தங்களது
இஷ்டம்போல் எப்போதும்
எதையும்தான் மேயவந்து
ஏறி மிதித்ததனால் யானை புகுந்தழித்த
கரும்புக் காடாச்சு
நாம்கனவில் கண்டநிலம்!
யாரெவரும் இல்லை,
தடுப்பதற்கும் ஆட்களில்லை.
பயிரெல்லாம் மேயப் பட்டுக்
கடிபட்டு
உயிர்ப்பிழந்து தோட்டம்
தரிசாகிக் கொண்டிருக்க…
மேய்வதற்கு எத்தனையோ
வகைவகையாய் மிருகங்கள்
பாய்ந்துவரும் நித்தம்ளூ
பயிர்பச்சை என்செய்யும்?
சின்னஞ் சிறுசெடிகள்…மேயவே முடியாத
பென்னம் பெருமரமாய்
வளருவதா சாத்தியம்? ஆம்
தப்பிப் பிழைக்க தமதுடலில் முள்தரிக்க
எப்படி முடியும்
இந்தச் செடிகொடிக்கும்?
இப்படியே போனால்
எல்லாமும் மேய்ந்து மேய்ந்து
செத்துத் தரிசாய்
சிதறும்நம் பச்சைநிலம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply