அரசனின் குற்றத் துக்கு
அவன்செய்த தவறு கட்கு
தெருவிலே திரிந்து..கையால்
திருகித்தன் முலையெ றிந்து
நெருப்பினை மூட்டி…நீதி
நெருப்பில்அவ் ஊரை வாட்டி
எரித்தனள் ஒருத்தி…இன்றேன்
இல்லையாம் இவள்போல் சக்தி?
எத்தனை கணவன் மார்கள்
எழுந்த சந்தேகத் தூடு
இத்தின அரசர் செய்த
இணையிலாக் குற்றத் தாலே
செத்தனர்? அதர்மர் செய்த
சிரச்சேதத் தாலே..இன்று
எத்தனை குடும்பம்…முண்ட
நிலையிலே துடிக்கின் றார்கள்?
அன்றொரு கணவ னுக்காய்
அறங்கேட்டாள் மனைவி நல்லாள்!
இன்றெண்ணி லடங்கா தோர்க்காய்
எதுஞ்செய்யா(து), எதுவுங் கேட்கா(து)
கண்ணகி மார்கள் கண்ணீர்க்
கடலினுள் மூழ்கிப் போனார்!
அன்றைப்போல் ஒருத்தியேனும்
அறத்தையேன் நம்பா துள்ளாள்?