உங்களைப் பார்க்க ஆச்சர்யம் பீறிடுது.
உங்களினைக் காண
ஐயங்கள் எழுகிறது.
நீவிர் தானா என்று நிஜம்எனையும்; கேட்டிடுது.
எவ்வளவு சாதுவான
மென்பஞ்சுப் பூனையைப்போல்…
அதிரா நடைநடந்து
அவைக்குக் கை காட்டுகிறீர்.
குண்டுமல்லிப் பல்வரிசை தெரிய..மிக நளினம்
கொண்டுமே புன்னகைத்து
நாகரிகம் நாட்டுகிறீர்.
இன்று எவரையும் பணிந்து வணங்குகிறீர்.
அன்றொருநாள் அனலுண்ட அரக்கனாய்…,
மதம்பிடித்துப்
பிளிறி அயலைத் துவம்சித்த கரியாய்..,
கடைவாய் இரத்தத்தை
துடைத்த காட்டேறியாய்..,
புல்லுள் மறைந்து
பொசுக்கென்று காலிலேறிப்
பல்பதித்த அரவாய்..,
பதுங்கி எதோ தந்திரங்கள்
செய்து பிடர்பிடித்துக் குதறிய நரியாய்..,
அழுதரண்ட குஞ்சுகளை
அலாக்காகத் தூக்கியேகி
உருசித்த கழுகாய்…,
வேளைக்கு வேளை
உருமாறி வதைத்தீர் எனஉம்முன்
நொந்துமீண்ட
சிலபேர்கள் செப்பினார்கள்!
செப்பியோர்கள் பொய்யர்களோ?
உம்மைக் குறைசொன்னோர் மூடரோ..?
நெஞ் செண்ணிடுது!