கனவும் நனவும்

கனவுநெடுஞ் சாலைகளைக் கடக்கப் புறப்பட்டோம்.
கனவுகளை உண்டு,
கனவுகளாற் பசிதணித்து,
கனவுகளை நீராக்கித் தாகம் தினந் தணித்து,
கனவுகளின் வர்ணம் கலந்து
உடைபுனைந்து,
கனவுகளை அணிந்து,
கனவுவீடமைத் தமர்ந்து,
கனவு நிழலடியில் கண்வளர்ந்து,
கனவுக்குள்
கனவுகண்டு அதற்கே காலஞ் செலவளித்து,
கனவுகளாற் சாலைசெய்து,
கடந்து ஒருபெரிய..
நனவு இலக்கடைய
காலைமுன் வைத்தின்றும்
கனவுநெடுஞ் சாலையினைக்
கடந்துகொண் டிருக்கின்றோம்.
கனவுகளே எல்லாமாய்ப் போனதனால்
சூழ்ந்துவந்த
நனவின் யதார்த்தத்தை
முகங்கொடுக்க முடியாமல்…
நனவுகளின் சுமையைச் சுமக்க முடியாமல்…
நனவுப் பொறிக்குள்
சாணக் கியமாக
குனிந்து புகுந்துதப்ப
முடியா திடிந்துள்ளோம்.
நனவில் பசியும் தாகமும் நெருப்பாகி
உணர்வைப் பொசுக்க
உடல்பிளந்து இரத்தநதி
மனைகளினை மூழ்கடிக்க
ஒருவழியும் தெரியாதோர்…
கனவுகளை மறந்து கரைந்தோட,
கனவுகளைத்
தின்று குடித்தோர்நாம்..
கனவுகளாய்ப் போகின்றோம்!
கனவும் அவசியந்தான்ளூ
யதார்த்தத்தை மாற்ற…வேண்டும்
நனவுகளில் நம்பிக்கைளூ
அதைத்தேடி நிலம் மிதித்து
அனல்குளித்து ஏறி
அடியெடுத்து வைக்கின்றோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply