சிறைத் தேசம்

எங்களது வாசல்கள் பூட்டப்பட் டுள்ளன காண்.
எங்களது ஜன்னல்கள்
இறுக்கமாக மூடினவாம்.
எம்அறையின் காற்றோட்டம்
மட்டுப்பா டாகிற்று.
எம் தெருப் படலையிலே
சங்கிலிப் பூட்டாடிடுது.
எங்கள் ஒழுங்கைகள் ஏனோ அடைந்துளன.
எங்களது வீதிகளில்
எண்ணியவா றேகேலா(து)
மறிப்புகள் பெருகிற்று.
எங்களது வான்கடலில்
பொறிகள் நூறாகியன!
இந்த நெருக்கடிக்குள்
எங்களது கால்கள் எதுவரைக்கும் தான்செல்லும்?
எங்களது கைகள் எப்படியிப் பூட்டுடைக்கும்?
எங்களது எண்ணம் தடைதாண்டியா எழும்பும்?
எங்கள் கவிதைகள் எண்திசைக்குமா ஏகும்?
எங்களது பாடல்கள்
என்றுலக எல்லைதொடும்?
எங்கள் விவாதங்கள் இத்தடைமுன் என்செய்யும்?
எங்களது தத்துவங்கள்
எதையிதற்குள் சாதிக்கும்?
எங்கள் பிடிவாதம் முரண்பாடித்
தடைதகர
பங்கென்ன நல்கும்?
பயனெதுவும் செய்யாத
எம்வாய்ச் சவடால்கள் எங்களையா காப்பாற்றும்?
கண்ணுக்குத் தெரியாத,
கையில் அகப்படாத,
கால்களில் இடறாத,
எம்முதுகில் செடிலாக…
நாம்அறியா வாறு பிணைபட்டு
எவரெவரோ…
கைகளிலே இருக்கும் கயிறுகள்…அரூபமாக
எம்மை இயக்குவதால்..,
அவைபலமாய் இருப்பதனால்..,
எங்களது வாசல்கள் பூட்டப்பட் டுள்ளனவாம்!
இந்த இடர்களைய
எதையிங்கு செய்வோம் நாம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply