சென்ற நாட்களைக் கணக்கில் எடுக்கையில்
செந்தமிழ்ச் சுவை பற்றி நினையாத,
வென்ற நம் தமிழ்க் கவிதை பயிலாத,
வேறு வேறு புதுமை புகுத்தியே
நன்றெனக் கவி செய்து மகிழாத,
நாளெலாம் பயனென்றுமே இல்லாது
சென்ற நாட்கள்தான் என்பேன்: தமிழனாய்ச்
சிறந்திடாத நாள் வீண்நாள் உரைக்கிறேன்.
நீண்ட காலம் நிலைத்த அனுபவம்,
நெருப்பில் நீரிலும் தப்பிய வல்லபம்,
தோண்டத் தோண்டக் குறையாத் திரவியம்,
சூழ் இயற்கையோ டியைந்த பெருமிதம்,
வேண்டி டாததை அகற்றி…அவசியம்
வேண்டும் என்பதை என்றென்றும் போற்றியே
ஆண்ட தனித்துவம்…,அனைத்து மொழியிலும்
ஆதி என்பதும், தமிழின் மகத்துவம்!
தமிழைத் தமிழின் பெருமைக் கவிதையை,
தமிழ் அடையாளம் பொங்கும் கலைகளை,
தமிழ்ப் பரிமாணம் சொல்லிடும் நூல்களை,
தமிழ்த் தலைக்கனம் குன்றாத வாழ்க்கையை,
தமிழின் பண்பாட்டை அதனின் தொடர்ச்சியை,
தகர்த்து…அந்நிய மோகத்துள் மாய்பவர்
தமிழை விற்போர்கள், தோற்க…வெறியற்றுத்
தமிழ் உணர்வொடு தமிழராய் வாழ்வமாம்!
8