அனல் வெயில்

சாதுவான பிராணிபோலத் தான் வெய்யில்
இருந்ததன்று!
வீட்டுநாய் போல
வாலைக் குழைத்துவந்து
ஈரமென்றும் வெக்கையென்றும் இல்லாது
எமைநக்கிப்
போயிற்று நேற்று!
இன்றோ புரண்டடித்து
ஆவேச மாக ஜல்லிக்கட்டுக் காளை
போலஅது சீறிடுது!
“புஸ் புஸ்” எனமூசிச்
சீறி எரிந்து திசைகளைக் கொழுத்தி
ஆயிரம் கொதிக்காலால்
எம்அயலை மிதித்தபடி
தாண்டவங்கள் ஆடிடுது!
தன்எரிமலை நாக்கால்
பூமியினை நக்கிப் புல்பூண்டைப் பொசுக்கிடுது!
தீயைத் தடவியதாய்த் தேகத்தைத்
தீய்க்கிறது!
நீரையெல்லாம் தன்தாகம் தணிக்க உறுஞ்சிடுது!
பார்த்திருக்கப் புகைகிறது…
பச்சைச் செடிகொடிகள்!
காண்டா வனத்தால் கருகிய வனமாகி
காய்கிறது வாழ்வு கருவாடாய்…
அனற்காற்றைக்
கூட்டாளி ஆக்கிக்
கொழுத்துதின்றைப் பகல்வெய்யில்!
தாச்சாச்சுத் தரை…வெயிலோ
எங்களினைக் கச்சான்
போலச் சுடுமணலில் புரட்டி வறுக்கிறது!
நிழலும் நெருப்பாக…
நின்று ஒதுங்கி ஆறா
அழலில் மெழுகானோம் நாம்:
உருகி வழிந்துதொடர்ச்
சூட்டினிலே ஆவியாகித் தொலையத்தான்
போகின்றோம்!
சாதுவாக அன்றிருந்து
சாத்தான்போல் இன்றுவாட்டும்
தீவெயிலின் வெறிஅடக்கத்
திட்டமென்ன வைத்துள்ளோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply