(இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக சென்ற 12 பெண்களின் சடலங்கள் சவூதி அரேபிய
பிணவறைகளில் —அண்மைய செய்தி)
தேட்டம் உனதுழைப்பால் திரளும்எனக் காத்திருப்பர்
வீட்டின் தலைவர்
விளையாடும் பிள்ளைகள்,
வாழ்வை நகர்த்த
வரங்களை என்றோ…ஓர்நாள்
நீயனுப்பி வைப்பாய் எனத்தவிக்கும் நின்குடும்பம்,
நீபோனால் நிமிரலாம் எனச்சொன்ன
வெளிநாட்டு
வேலைவாய்ப்பு மையம்,
உனக்கு ஆசைத் தூண்டிலிட்டுப்
போகவைத்த முகவர்கள்,
அந்நியச் செலவாணி
கூடும் உன்னாலுமென்று
குறிவைக்கும் ‘பொருள் கொள்கை’,
யாவையையும் ஏய்த்து…
யார்க்கெதுவும் கூறாது…
நீயோ ‘மத்திய கிழக்கின்’
ஒருமுடுக்கில்
பிணவறையில்
உன்னோடு துணையாக பதினொருபேர்
கிடக்கக் கிடக்கின்றாய்!
வீட்டுப் பணிப்பெண்ணாய்…
வெளிநாடு சென்றுந்தன் வீட்டை நிமிர்த்த…ஏங்கி
வெளிநாட்டில் சிதைந்துன்
சாவுக்குக் காரணமும்
சரியாய்ப் பகராது,
மீண்டிங்கு உடல்வருமோ…
விபரம் வழங்காது,
வழிமேல் விழிவைத்து
இன்னும் எத்தனைநாள் ஏமாந்து
நின்சுற்றம்
உன்வரவை எதிர்பார்க்க
நீ… பிணமாய் உறைந்திருப்பாய்?
என்நாட்டுப் பெண்ணே ஏனம்மா நீ…தோற்றாய்?