காலப் பனிக்கட்டி உருகிக் கரைந்து…கண்
ணீராய்ப் பரவி
குடியிருந்த நிலங்களினை
மூழ்கடிக்க…
குடும்பச் சுமைமுதுகில் கட்டியதால்
மீட்க முடியாமல்
தினமும் மும்மூன்று முறை
சாவை அணைத்தும் சாகாது
“வாழ்வோடா…
சாவோடா…போனான் சகோதரன், மகன், கணவன்”
ஏதும் புரியாது.,
எண்ணுக் கணக்கற்று
நாளோட ஓட நடுத்தெரு வந்து…, “பகல்
தானிதுவோ ராவோ” என்ற கவலையற்று,
போராடிச் சோர்ந்து
புலம்புவோர் புகைந்துள்ளார்!
காணாமல் ஆக்கப் ‘பட்டவர்கள்’
எனும்மகுடம்
கூறிடுதோ வேறர்த்தம்?
உள்குத்துக் கொண்டதுவோ?
கைகளிலே தூக்கிய கலர்ப்படங்கள்:
ஏதேதோ
மெய்ச்சான்று ஆவணங்கள்:
“எங்கே” எனத்தொக்கி
நிற்கின்ற கேள்வி:
நிம்மதியும் வளமைவாழ்வும்
தற்கொலை புரியத் தருணத்தைப் பார்த்தலைய..
மாலையினைச் சூட்டுவதா?
வெறும்படத்தை வைப்பதுவா?
மோட்சவிளக் கேற்றுவதா?
முகம்காண நேருவதா?
தாலியினைப் பூணுவதா?
இல்லையதை அறுப்பதுவா?
குங்குமம் இடுவதுவா? கொட்டித் தலைமுழுகிச்
சங்கெடுத்து ஊதுவதா?
இன்றும் எதிர்பார்ப்பதுவா?
முடிவெடுக்க முடியாத இருதலைக் கொள்ளி
எறும்புகளாய்…
வாழ்க்கை வண்டியினை இழுத்து…வாயில்
நுரைகக்க…ஏலாது,
நோன்பிருந்தும் பலன்பெறாது,
எரியும் வயிற்றை அணைக்கஏதும் வழிகளற்று,
காத்திருப்ப தின்னுமின்னும்
எத்தனைநாள் தேறாது,
ஏக்கங்கள் உள்உழுத்துச் சிதைந்தழிவ தறியாது,
யாரைஇன்னும் எதிர்பார்த்து
யாசிக்கும் இவ்உறவு?