1.தாங்கள் இன்னும் கவிதை பாடுவது எதற்காக?
இது தாங்கள் இன்னும் வாழ்வது எதற்காக என்ற கேள்வியை ஒத்தது. நாம் விரும்பியோ விரும்பாமலோ நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை அமைந்ததைப்போல, அதை விரும்பியோ விரும்பாமலோ நாம் வாழ்ந்து வருவது போல, எனக்கும் கவிதை பாடும் ஆற்றல் அமைந்துவிட்டதாகவே கருதுகிறேன். வாழ்வின் அர்த்தம் புரிந்தால் அடுத்த பிறவியை, வாழ்வையே விட்டுவிட்டு முத்தி அடைய முனைவது போல கவிதை பாடுவது ஏன் என்ற கேள்விக்கான பதிலை ஒருவேளை அறிந்தால் நானும் கவிதையை எழுதாமலே விட்டுவிடுவேனோ என்னவோ…
2.பாட்டினால் மாற்றலாம் இந்தப் பாரை என பாரதி நம்பினான். நீங்களும் நம்புகிறீர்களா?
ஆம். நம்பிக்கை தானே வாழ்வு. கலைகள், இலக்கியங்கள் என்பன உணர்ச்சிகளை, மனித மனநிலைமைகளை ஆற்றுப்படுத்த வல்லவை. அதனால் தான் அன்றிலிருந்த இன்றுவரை கலைகள், இலக்கியங்கள், முக்கியமாக கவிதைகள் என்பவற்றிற்கு உலகெங்கும் சகல மொழிகளிலும் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கவிஞர்கள் யுகபுரு~ர்களாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
மனிதன் எவ்வளவுதான் அறிவால் உயர்ந்தாலும் அவன் உணர்ச்சிகளை, உணர்ச்சி வயப்படுதலை, முற்றாய்த் தவிர்க்க, கட்டுப்படுத்த, மறைக்க முடியாதவனாகின்றான். எனவே கவிதைகளின் தேவைகள் என்றென்றும் இருக்கத்தான் செய்யும்.
இன்று ஊடகங்களில் வெளியாகும் ஒருவரிச் செய்தி அல்லது தகவல் கூட சமூகத்தில் எத்தனை அதிர்வுகளை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன?
ஒரு செய்தி அல்லது தகவலை விட எத்தனையோ மடங்கு விரிந்த, உயர்ந்த, செறிந்த, வலிமையான, மனங்களில் தொற்றி இரசாயன, பௌதீக மாற்றங்களை நிகழ்த்த வல்ல, கவிதைகளால் இந்தப் பாரை மாற்றலாம் என பாரதிபோல நானும் நம்புகிறேன்.
3.எத்தனை புத்தகங்களை இதுவரை வெளியிட்டிருக்கிறீர்கள்?
நான்கு. 2001இல் ‘கனவுகளின் எல்லை’, 2004இல் ‘கைகளுக்குள் சிக்காத காற்று’, 2013இல் ‘எழுதாத ஒரு கவிதை’, 2014இல் ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’.
4.சுருக்கமாக தங்கள் கவியுலகப் பயணம் பற்றிக் குறிப்பிடுங்கள்.
1989, 90 களில் ஒருசில வரிகளை பாடசாலை குறிப்புக் கொப்பிகளில் எழுதிவைத்த ஞாபகம்.
எதேச்சையாக யாழ் இந்துக் கல்லூரி விஞ்ஞான மன்ற நிகழ்வுக்காக முதன் முதலில் கவிதை போல ஒன்றை வாசித்தேன். அல்லது நான் வாசித்தது கவிதை போல இருந்தது.
அதைத் தொடர்ந்து கல்லூரித் தமிழ்ஆசான் கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் -நான் ஒரு விஞ்ஞான மாணவனாக இருந்தபோதும் – என்னை உற்சாகப் படுத்தி கல்லூரி கவியரங்குகளில் ஏற்றிவைத்தார்.
1993 ல் அகில இலங்கை கம்பன் கழகத்தார் நடத்திய கவிதைப் போட்டியில் கலந்து கொண்டேன். அதில் முதல் மூன்று பரிசுகளில் எதையும் பெறாத போதும் மூன்றாம் பரிசைப் பெற்றவரைத் தவிர்த்து என்னை அவ் ஆண்டு கம்பன் விழா கவியரங்கில் கவிதை பாடும் வாய்ப்பை ஏற்கனவே கழகத்தால் விடுக்கப்பட்ட அறிவிப்பை மீறி கம்பவாரிதி இ.ஜெயராஜ் வழங்கினார்.
ஈழத்தின் மூத்த கவிஞர் இ.முருகையனின் வீடு தேடிச் சென்று கவிதை தொடர்பான பல்வேறு விடயங்களைப் பயின்றேன்.
‘சாளரம்’ எனது முதற் கவிதையொன்றைப் பிரசுரித்தது.
எனது முதலாவது நேர்காணல் 1995ல் அ.யேசுராசா நடத்திய ‘கவிதை’ இதழில் வெளிவந்தது.
பல கவியரங்குகளில் தொடர்ச்சியாக இன்றுவரை ஈழத்தின், தமிழகத்தின் மூத்த முன்னணி கவிஞர்களுடன் பங்கெடுத்து வருகிறேன்.
வலிகாம இடம்பெயர்வின் முன்னும் பின்னும் வானொலிகளில் என் கவிதைகள் பல வாசிக்கப்பட்டன.
வலிகாம மீள்குடியேற்றத்தின் பின் பல சஞ்சிகைகள், நாளிதழ்களில் எனது கவிதைகள் வெளிவந்தன.
தொடர்ந்து இடையறாது ஒரு தாகமாய், தவமாய் கவிதையுடன் ஊடாடி வருகிறேன்.
பிரசுரமாகாத பல கவிதைகள் உள்ளன. எனது பல நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. எனது பல இசைப்பாடல்கள் இசையமைக்கப்பட்டுள்ளன.
எனது கவிதைகளை யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவரும் அண்மையில் தமிழகத்தில் ஒரு மாணவரும் ஆய்வு செய்துள்ளார்கள்.
எவரும் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சுமார் 5600 வரையான கவிதைகளை இதுவரை எழுதியுள்ளேன். இப்படிக் கவிதைகளை எழுதலாமா? இவை எல்லாம் கவிதைகள் தானா? எனவும் எவரேனும் கேட்கலாம். இவை பற்றிப் பெரிதாய் அலட்டிக் கொள்ளாது நான் தொடர்ந்தும் இடையறாதும் அன்றாடப் பணிகள் பொறுப்புக்களுக்குமிடையிலும் இயங்குகிறேன்.
நெருக்கடியான நேரங்களில் தோன்றும் கவிதை தொடர்பான பளிச்சீடுகளை, கவிதைச் சிந்தனைகளைக் குறிப்பெடுத்து வைத்து பின் அவற்றை முழுமைப்படுத்தும் கலைநுட்பம் வாலாயமாகிவிட்டது.
எனக்குத் தெரிந்ததை, எனக்கு இயல்பாய் வருவதை எழுதுகிறேன். ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என எவரையும் நான் கேட்பதில்லை. விமர்சிப்பதில்லை. ஏன் இப்படி எழுதுகிறாய் என என்னைக் கேட்பவர்களையும் கண்டு கொள்வதில்லை. நடுநிலைமையற்று, உண்மையை மறுதலித்து, ஏதோ பின்னணிகள் பின்புலங்களுடன், எவருக்காகவோ இயங்கும் விமர்சகர்களை நான் கணக்கெடுப்பதுமில்லை.
“என்கவிதை இது” என எவரும் உடனடியாக இனங்காணும் தனித்தன்மையோடு அது இருக்கவேண்டும் என விரும்புகிறேன். இன்றும் கம்பனிலிருந்து இன்றைய கவிதையையும் பயிலும் மாணவனாகவே இருக்கிறேன். காலம் அல்லது இயற்கை அல்லது கடவுள் நான் கவிஞனா? எனது கவிதைகள் கவிதைகள் தானா என்பதை முடிவுசெய்து கொள்ளட்டும் என நகர்கிறேன்.
எனது கவிதைகள் தொடர்பான உத்தியோக பூர்வ இணையத்தளம் றறற.வாயயெதநலயளநநடயn.உழஅ. இது ஒவ்வொரு வாரமும் இற்றைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எனது கவிதைகள் தொடர்பான பல விடயங்களையும் எவரும் பார்வையிட முடியும்.
5 தாங்கள் பாடிய கவிதைகளுள் தங்களுக்குப் பிடித்த ஒரு காதல் கவிதை?
ஒன்றா இரண்டா?
6.அதே போல உங்களுக்குப் பிடித்த இன்னுமொரு கவிதை?
என்கவிதைகள் எல்லாமும் ஏதோ ஒரு விதத்தில் எனக்குப் பிடித்தவையே. என் சுவாசத்தில் இந்த மூச்சுத்தான் சிறந்தது என என்னால் கூற இயலாது. இதற்கு முதற்கேள்விக்கும் இப்பதில் பொருந்தும்.
7.தமிழ்க் கவிதையின் எதிர்காலம் பற்றிய தங்கள் கணிப்பு என்ன?
நிச்சயமாகச் சிறந்ததாக, மேம்பட்டதாகவே இருக்குமென நம்புகிறேன். நான் முன் சொன்னது போல மனிதனின் அகச்சூழல் உணர்வுகளால் ஆழப்படும் வரை கலை, கவிதைகளின் தேவையும் இருந்துகொண்டே இருக்கும். இதற்குத் தமிழர்கள் விதிவிலக்கல்ல. அதிலும் தமிழர்கள் அதிகம் உணர்வுவயப்பட்டவர்கள் எனவே தழிழில் கவிதை நலிய வாய்ப்பே இல்லை.
மேலும் இன்றுள்ள நெருக்கடிகளை விட மிக மிகக் கடுமையான இக்கட்டுகளை, நெருக்கடிகளை, இருண்ட யுகங்களை, கண்டு அனுபவித்துக் கடந்தே தமிழ்க்கவிதை வளர்ந்து வந்திருக்கிறது. எனவே அது இன்றைய, நாளைய சவால்களையும் சமாளித்தே தீரும்.
அடுத்து, கவிதையின் அடிப்படை அம்சங்கள் பண்புகள் எப்போதும் மாறாத போதும் காலத்திற்கு காலம் உயிரிகளைப்போல கவிதையும் பரிணாம மாற்றத்திற்கு வளர்ச்சிக்கு உட்பட்டே வருகிறது. வடிவமைப்பு, யாப்பு வகை, பாடுபொருள், பார்வைக்கோணம், அணியலங்காரங்கள், கவிதையின் பல்வேறு நுட்பங்கள், என்பவற்றின் பாவனை, கையாள்கை என்பன மாற்றத்துக்குள்ளாகியே வந்துள்ளன.
சங்ககால கவிதைபோல கலித்தொகை காலத்தில் கவிதை இருந்ததில்லை. அன்றைய கவிதைபோல நேற்றைய கவிதை இல்லை. நேற்றையது போல இன்றையது இல்லை. நிச்சயம் நாளையும் இது மாற்றத்திற்கு உள்ளாகியே தீரும். எனவே இன்றைய கவிதையே நவீனமானது என்பது அபத்தமான கூற்று என்பேன்.
யார் எவர்தான், எந்த விமர்சகர்கள் தான், கவிதைகள் பற்றி ஆயிரம் வியாக்கியானங்களை முன்வைத்தாலும் காலத்திற்கு தேவையானதை உள்வாங்கியும் தேவையற்றதை மறுதலித்தும் முன்நோக்கி நகரும் பேராற்றல் தமிழ்க் கவிதைகளிடமும் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறது என்று திடமாக நம்புகிறேன்.
கவிதை கவிதைக்குரியதா? மக்களுக்குரியதா? தேர்ந்த வாசகர்களுக்கு மட்டுமுரியதா? விமர்சகனுக்குரியதா? என அவரவர்கள் தத்தமது விருப்ப வெறுப்புகளுக்கேற்ப கதைத்தாலும், எழுதிக் குவித்தாலும், தான் யாருக்குரியது என்பதை தமிழ்க்கவிதை தெளிவாகவே நிரூபித்து வருகிறது என்பேன்.
“கவிதை கவிதைதான்.
ஆராய்ச்சிகளும் விமர்சனங்களும்
கவிதைகளிடம் இதுவரை
தோற்றுத்தான் போயின”
என்ற அண்மையில் நான் முகநூலில் வாசித்த கவிஞர் மகுடேஸ்வரனுடைய கூற்றோடு எனக்கு அதிகம் உடன்பாடு உள்ளது.
8.சமகாலத்தில் சிறந்த கவிஞர்கள் எனக் குறிப்பிடக் கூடியோர் யார்.
எவருமே தாழ்ந்த சிறந்ததல்லாத கவிதைகளை எழுதவேண்டும் என எழுத முயல்வதில்லை. ஆனால் கோவிலில் எல்லோரும் “அரோகரா” என்று ஆரவாரிக்கும் போது “ஐயோ” எனக் கூவி கவனத்தை தம்பக்கம் ஈர்த்து இழுத்து பிரபலம் தேடுவோர் போல கவிதை எழுதுவோர்களும் இன்று வருகிறார்கள். இவர்களால் கோவிலுக்கோ தெய்வத்திற்கோ கும்பிடுவோர்களுக்கோ எந்தப் பயனுமில்லை.
கவிஞர்கள் எல்லோருமே தங்கள் அறிவு, ஆற்றல், அனுபவம், பயிற்சி, தேடல், விருப்பு இரசிப்பின் படிதான் கவிதை புனைகிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை காணப்படுகிறது. சிலர் சில விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவார்கள். சிலவற்றை தவிர்ப்பார்கள்.
இது தான் சிறந்தது இவர்தான் சிறந்தவர் என்பது அவரவரின் விருப்பு, வெறுப்பு, இரசனை, சமயம், சமூகம், அரசியல் சார்ந்தது என்பேன்.
கம்பன் வள்ளுவன் பாரதி போன்றோர், இன்றைய சமகாலக் கவிஞர்கள் பலரை விட உயர்ந்து நிற்பதைப் பார்க்கின்றேன். அவர்கள் அன்றே தொட்ட உயரங்களை எல்லைகளை இன்றையவர்களால் எட்டிக் கூட பார்க்க, தொடக்கூட முடியாத நிலையே உள்ளது என்பது எனது அபிப்பிராயம்.
9. தங்கள் குரு யார்? அவருடன் நடைபெற்ற சுவையான சம்பவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
இவர்தான் எனது ‘பிரதம குரு’ இவர்கள் எனது ‘உப குருமார்’ என்று சுட்ட எனக்கு எவரும் இல்லை. இதுவரை எனது ஞானகுருவை நான் சந்தித்ததில்லை.
ஆனால் எனது கவிதைப் பயணத்தில் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை துணைநிற்கும், வழிகாட்டும், ஆலோசனை கூறும், அபிப்பிராயம் தெரிவிக்கும், ஆற்றுப்படுத்தும், அனுபவம் பெற வைக்கும், ஆசீர்வதிக்கும் அனைவரும் எனது குருமார்களுக்கு நிகரானவர்களே.
கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம், கம்பவாரிதி இ.ஜெயராஜ், கவிஞர் இ. முருகையன், என் தமிழாசான் பண்டிதர் சொக்கன், சிரித்திரன் சிவஞான சுந்தரம் ஐயா, ‘சாளரம்’ ஆசிரியர் கவிஞர் விவேக், கவிஞர் சோ.ப என இந்தப்பட்டியல் இன்னும் நீளும்.
கவிதை நுட்பங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற வகையில் கவிஞர் முருகையன் முக்கியமானவர். என்னை தரமான கவியரங்க மேடைகளில் ஏற்றிய கம்பவாரிதி அவர்கள் எளிதில் பாராட்டமாட்டார். குறைகளை அதிகம் சுட்டிக்காட்டுவார். அது கூட நான் வளர அவர் எனக்கு இட்ட உரமாகவே கருதுகிறேன்.
கவிஞர் முருகையனிடம் கவிதை பயின்ற காலத்தில் நான் உயர்தரம் கற்று முடித்திருந்தேன். வருமானம் ஏதும் இல்லாத காலம் அது. அவரிடம் சுமார் ஒன்றரை வருடம் பயின்றேன். அவர் என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் கற்றதற்கு கோடி கொடுத்தாலும் தகும். ஆனால் நான் கொடுத்தது ஒரு ‘கோடி’ வேட்டி தான். அதனோடு ஒரு கவிதையை இணைத்திருந்தேன். அதன் தலைப்பு ‘கொடுத்தேனோர் கோடி’. இப்படி பலருடன் பல சுவையான சம்பவங்கள் உள்ளன.
10. இதுவரைக் கவிபாடிப் பெற்றது எதை?
பலதை. நான் அதுவரை பயணித்த பாதையை விட்டுத்திரும்பி அதிலிருந்து மாறி முதலில் கவிதையைக் கண்டேன். தமிழை நெருங்கினேன். கம்பன் வள்ளுவன் முதல் இன்றைய கவிஞர்களை அறிந்தேன். பல கவிஞர்களின் நண்பனாகி ஒரு பெரும் கவிதைக் குடும்பத்தில் இணைந்தேன். எண்ணற்ற கவிதை இரசிகர்களை அன்பர்களைப் பெற்றேன். வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் கவிதையைக் காணும் மனப்பாங்கைக் வளர்த்தேன். கவிதையால் ஓரளவு மனதை மென்மையாக்கியிருக்கிறேன். என் பாரம்பரியத்தில் வந்த விலங்குக் குணங்களுள்ளே மனிதத் தன்மையை என்னுள் தேட முயன்றிருக்கிறேன்.
கவிதை தனித்து ஒதுங்கியிருந்த என்னை ஒரு சமூகப் பிராணியாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. நான் கவிஞனோ இல்லையோ கவிதையால் எனக்கு காசு பணம் கிடைத்ததோ இல்லையோ சமூகம் என்னைக் கவிஞனாக பார்க்கிறது என்பதே எனக்குப் பெருமையாகப் படுகிறது.
நான் எந்தப் பதவி பட்டங்களைப் பெற்றிருந்தாலும் அவையின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுவதை விட ஒரு கவிஞனாகப் பார்க்கப்படுவதையே விரும்புகிறேன்.
என் சார்பாக, என் குடும்பம் சார்பாக, என் ஊர் சார்பாக, என் கல்வி தொழில் சார்பாக நான் பெற்ற அறிமுகம், நட்பு, உறவை, விட நான் கவிதையுடன் தொடர்புபட்டதால் பெற்றவை அனேகம். ஏராளம். தங்கள் நட்பு உட்பட….! இவை அனைத்தும் கவிதையால் எனக்குக் கிடைத்தவையே.
11.கவிதையால் இழந்தது எதை எதை?
கவிதையால் இழந்தது என்றெதுவுமில்லை. என்னை இழக்கும் போது, அல்லது என்னை இழக்கும் தருணங்களில், கவிதைகளை பெற்றுக் கொள்வதை என்னால் இழப்பாக கருத முடியாது.
30.04.2017