கலைத்துவிட முடியாக் கனவு

ஏதோ ஒருகனவு என்று கலைத்துவிட
முடியாத கனவு
முழுதுமெனை விழுங்கிற்று.
அந்தக் கனவின் விஸ்வரூபம்
அடிமுடியே
அற்றென் அகத்தை ஆட்டி மிரட்டிற்று.
கனவில் எனைச்சூழ்ந்து
கலைத்தன பேயுருக்கள்.
எனைத் துரத்திக் கடித்தனவே
ஊழையிட்டு நாய்நரிகள்.
ஓடியோடி…அருகே
கடலலை இரைச்சலிட்ட
கரையில்..,
எங்கெங்கும் கருமிருட்டுக் கவிந்திருந்த
நிலையில் தடக்கி விழுந்தேன்ளூ
சிதறியெங்கும்
கைகால்கள்,
மூச்சுக் கலைந்துபோன உடலங்கள்,
அவயவங்கள்,
கிடக்க
அவற்றில் இடறிவீழ்ந்து
எழுந்து நடந்தேன்!
மரணமுனகல் அயலெங்கும்
அதிர்ந்தது!
‘காப்பாற்றும்’ என்ற கதறலுக்கு
செவிகொடுக்க முடியாமல்
கடல்மடியில் வீழ்ந்த கணம்…
பெருஞ்சத்தத் தோடு எழுந்தது அனற்சுவாலை!
அந்தப் பிளம்பில்
கரைமுழுதும் பொசுங்கியொரு
நொடியிற் பிடிசாம்பல் ஆகி
அதையுமொரு
மழையடித்துக் கடலோடு கரைத்துச்
சுவட்iடெயல்லாம்
அழித்துவிட்டே போயிற்று!
அரண்டு மிரண்டெழுந்தேன்!!
ஏதோ ஒருகனவு என்று கலைத்துவிட
முடியாத இக்கனவால்…
உயிர்வலிக்கக் கிடக்கின்றேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply