எங்கேதான் போவதென இலக்கற்ற ஓர்இலவம்
பஞ்சாய் அலைந்தபடி
முடியாப் பயணத்தில்
ஒவ்வொரு திசையுமோர் விபச்சாரி போலழைக்க
எவ்வாறு மீண்டேன் என
அறியா தெனைக்காத்து
இங்கின்று நிற்கின்றேன்!
எப்படிநான் இங்குவந்தேன்?
என்மூளை சொன்னபடி, என்னிதயம் சொன்னபடி,
என்னுணர்வு சொன்னபடி,
என்னுள்ளே கேட்கின்ற
அந்த அசரீரி அழைத்தபடி, வந்தேனா?
என்னென்று இங்குவந்தேன்?
எப்படி இந்நிலையடைந்தேன்?
என்னென்று வந்ததடை எல்லாஞ் சமாளித்தேன்?
என்னென்றும் மனங்கவர்ந்தேன்?
எவ்வாறு வாகைகொண்டேன்?
என்பது எனக்கே விளங்காப் புதிராக..,
என்பாதை முன்பு அறியா வியப்பாக..,
என்பயணத்தை எண்ண
எனக்கது கனவாக…,
விதி…கையில் நூல்பிடித்து
ஏற்றிவிட்ட பட்டமாக,
எதுசரிகள் பிழைகள் எதுமறியேன்:
இங்குள்ளேன்!
இன்றிதனை எழுதுகையில்…
ஏதும் ஒருதிட்டம்,
என்னவேனும் இலக்கு,
ஏதும் ஒருதூண்டல்,
என்னுள் முகிழ்ந்துளதோ…
“இல்லை”யென்று சொல்கின்றேன்!
எங்கேநான் போவதென இலக்கற்ற
ஓர்இலவம்
பஞ்சாய் அலைந்தபடி
முடியாப் பயணத்தில்
இங்கிருந்தும் எனையறியா திப்போ நகர்ந்துள்ளேன்!
இங்கிதென் வாழ்வின்
பாதி கடந்துவிட்ட
சந்தி…இனியெங்கே தாவி உயரவுள்ளேன்?
எந்தெந்தச் சிகரங்கள் எட்டிப் பிடிக்கவுள்ளேன்?
நொந்து துவள்வேனோ?
நொடிந்து அழுவேனோ?
கெந்தி எந்தெந்தக் கிணறுகளைத் தாண்டியெங்கள்
சந்ததிகள் பயன்கொள்ளச்
சாதனையென் செய்யவுள்ளேன்?
ஏதும் அறியேன்…
இன்றுவரை என்பயணம்….
தோற்றதில்லை. வீழ்ந்ததில்லை.
துயரெவர்க்கும் செய்ததில்லை.
கூற்றாக வில்லையார்க்கும்.
குற்றம் புரிந்ததில்லை.
ஏற்ற அறநேர்மை விட்டு இழிந்ததில்லை.
தோற்றதில்லை காசின்முன்.
தொடருமிது நாளைக்கும்–
நேற்றுப்போல்…
நம்பிக்கை நிழல்விரிக்க நடக்கின்றேன்.