திசைகள் அவை எட்டும் சிதறிக் கிடந்ததிங்கு.
திசைகள் ஒருஎட்டும்
தெளிவாய் விரிந்ததிங்கு.
இங்கேநான் நிற்கின்றேன்…
என்தலைமேல் எண்திசையும்
தம்வழியை எல்லைகளை எனக்கு உரைத்தனவாம்!
நாளை இங்கிருந்து நடப்பேன்
சிலதொலைவு….
ஆம்அப்போ அந்த இடத்தினிலே
எண்திசையும்
தம்வழியைத் தங்கள் எல்லைகளை நீட்டிடுமாம்.
வரும்வாரம் மேலும்
பலதூரம் கடந்தவாறு
இருப்பேன்நான் அப்போதும் அவ்விடத்தில்
எனைநிறுத்தி
தங்களது வழிகளையும் எல்லையையும் காட்டிடுமாம்!
திசைகளின் எல்லை நாம்நகர நகர்ந்துபோகும்.
திசைகளின் பாதை நாம்நகர முன்செல்லும்
திசைகளது எல்லை முடிவிலி வரைநீளும்
திசைகளது பாதை முடிவிலி வரைப்போகும்
நாமோ தான்…நம்மை
மேதாவிகளாய் நினைத்தோம்!
“நாம் திசையின் வழியை எல்லைகளைத் தகர்ப்போம்
பாருங்கள்” என்றூர்க்குப்
பூச்சாண்டி காட்டுகிறோம்!
நாம்செல்லச் செல்ல திசைகளது எல்லைநீளும்,
நாம்தகர்க்கத் தகர்க்க
திசைகளது எல்லைமாறும,
நாம்முயலத் திசைகளது எல்லைமுடி விலியாகும்,
ஆனாலும் “பயணித்தோம்
அருகிருந்த திசைகளது
ஈர்நாலு எல்லைகளை எப்படித் தகர்த்தோம்காண்
காணெ”ன்று குதிக்கின்றோம்!
கண்டேதும் அறியாதோர்,
ஞானத்தில் சூனியங்கள்,
‘நம்மவர்கள்’ “இந்த
ஞாலத்தின் எல்லைகளைத் தகர்த்தழித்த ஞானியர்கள்
தாமெ”ன்று புளுகுகிறார்…
நாமும் நிமிர்ந்திடுவோம்!
ஆனாலும் எண்திசையும் நமுட்டுச் சிரிப்போடு
ஏளனமாய் எங்களினைப் பார்ப்பதனை
எவரறிவோம்?
ஈரெட்டுத் திக்கும் ஏதுமே மாற்றங்கள்
தானற் றிருப்பதனை,
‘வெற்றிடம்’ எனஒன்று
தோன்றாத ‘இயற்கைச் சமநிலையை’ யாரறிவோம்?
உணர்ந்தும், உணராத மாதிரியும்,
உலகின்…முன்
பிழைக்கவழி வேறற்றோம்…
பித்தலாட்டம் புரிகின்றோம்!