எடுப்பார் கைப்பிள்ளைகள்

ஏனென்று கேட்க எவருமில்லா அனாதைகள்நாம்.
யாரும் எதுஞ்சொல்லத்
தடுக்க முடியாமல்
கையா லாகாது காலம் கடத்துவோர்நாம்.
பொய்யில் புரட்டில் புரள்வோர்கள்
எம்நெஞ்சில்
கைவைக்கும் போதும்,
கழுத்தைத் திருகையிலும்,
‘ஐயோ’ எனக்கதறி அயலை அழைத்தவரின்
கையை முறித்து
அடித்துக் கலைப்பதற்கு
முடியாத கோழைகளாய் முழித்துக் கிடப்போர்நாம்.
கள்ளையும் பாலையும்
பிரிக்கத் தெரியாமல்
அள்ளிக்குடித்து அவலப் படும்நேரம்
வெளுத்ததெல்லாம் பாலென்றே வீழ்ந்தோர்நாம்.
அதாலின்று
தொழுதுண்டு வாழும்
துயரம் அடைந்தோம்நாம்.
‘தோற்றவர் நாமல்ல’ என்று
எமதிருப்பைத்
தேற்றுவோர் சிலர்சொல்லும் போதும்
கனவெல்லாம்
தோற்று
நனவும் தோற்று
யதார்த்தத்தை
சீரணிக்க முடியாது
சிதைந்து கிடப்போர்நாம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply