நட்டாற்றில் நின்ற நாலுலட்சம் பேரினோலம்
எட்டவில்லை தோட்டா
வேலிகளைக் கடந்தெங்கும்.
கண்டுமே காணாத கனவான் களும்…நேரே
கண்டுமே கண்மூடிக்
கடந்த கடவுளரும்
பெருமௌனம் பூணப் பரவிற்று போர்க்காய்ச்சல்!
ஒருபக்கம் உப்புக் கடல்:
செங்கொடி போலே
மறுபக்கம் இரத்தக் கடல்:
இவற்றிடையே
குடிக்கத் துளியுமின்றிக்
குலைந்ததையோ நூறுஉடல்!
‘பெட்டி அடிபட்ட’ முற்றுகைச் சிறைக்குள்ளே
விட்ட எறிகணை
வெடிமழையால் சிதறியவர்
அந்தந்த இடத்தில் அப்படியே சமாதியாக
கந்தகப் புகைக்காற்றே
சுவாசமாச்சு மிஞ்சியோர்க்கு!
பந்தம் எரிக்கப் பொசுங்கிய தேன்கூடாய்
அவ்விடம் கருக
அவ்விடம் இருந்து மீண்டு
மௌனித்தன வாய்கள்.
மௌனித்தன கரங்கள்.
மௌனித்தன உடல்கள்.
மௌனித்தன மனங்கள்.
மௌனித்தது உணர்வு.
மௌனித்தது கனவு.
மௌனித்தது ரோசம்.
மௌனித்தது மானம்.
மௌனித்தது துவக்கின் மனச்சாட்சி.
உயிர்பிழைத்தோர்
வெளியேற…
எண்ணற்ற புதைகுழிகள், சாம்பல்
விளைந்து தணலாறா வெட்டை வெளிகளிடை,
“யுத்தமும் இறந்த”தென்று எழுந்ததொரு பேரோசை!
இத்தனைக்குப் பின்னும்…
நடந்தது களையெடுப்பு!
வெற்றிடமே சூழ்ந்ததனால்
வெளிவரலை வேட்டினொலி!
ஏங்கித்… திசையெங்கும் பரவ
வழியின்றி…அன்று
தேங்கிற்று வரலாறு!
தேங்கியே மாசடைய…
ஓங்கிற்று நாற்றம்!
ஒருகோடி வகைக்கிருமி
‘கெத்தாய்ப்’ பெருக சமூகக் கிளைகளெங்கும்
தொற்றின தொடர்நோய்கள்.
தொலைந்தது சுகவாழ்வு.
அத்தனை வடு, சுவடும் அழிந்தும் அழியாதும்
இருக்கும் அமைதிபூத்த இந்நாளில்
இறுதிவரை
மறுதலிக்கப் பட்ட நீதியினை
மீண்டுமொரு
சுடரேற்றித் தேடித்
துடிக்கிறது நினைவேந்தல்.