சிதைந்த நகரினது நாட்கள்

மனிதர் குடியேறும் முன்பே…மடைதிறந்து
துயரம் குடியேறிக் கிடக்கும்நம்
தொல்நகரில்
பகலிலும் இருளோ படியும் தினந்தினமும்.
தகிக்கும் வெயிலில் அலைந்து
தனதுடம்பின்
ஆறாத காயங்கள் பழுத்துச் சிதல்வெடிக்க
வாயுரைக்க முடியா
வலியில்
அதுவதங்கும்.
தேடுவார்கள் அற்ற தெருநெடுக
தனிமைமட்டும்
ஒருவிசரன் போல உலவ,
வருங்காற்று
மரணத்தின் வாக்குமூல
மணத்தைச் சுமந்துவர,
மண்டிய பற்றைகளை அகற்றி மரம்வெட்டி
நின்றெழுந்த புற்றுகளை வீழ்த்தி
நிலம்பரவி
களவாடப் பட்டுச்
செல்லாக்கா சாய்க்கிடக்கும்
கிளைத்து வளர்ந்த,இன்று
கூரையற்றுத் தனித்துள்ள
வீடென்று சொல்ல முடியா திடிந்திருக்கும்
கற்குவியலுக் குள்ளே
கனவுகளை ஒவ்வொன்றாய்த்
தேடி எடுக்கிறார்கள்…மிஞ்சித் திரும்பியோர்கள்!
காடாகிப் போன களனிகளை
நாடாக்க
ஏதும் உபாயமற்றுளூ
எந்தவித நம்பிக்கைப்
பிடிப்புமற்றுளூ
பற்றக் கொழுகொம்பு எதுவுமற்றுளூ
நடக்கும் பிணங்களென வயிற்றைக் கழுவுறார்கள்.
விடயம்இவ் வாறிருக்க
வில்லங்க மாக
திடீரென்றோர் திட்டியினைத் திருத்தி
அங்கொளிந்திருந்த
கொடுமைசெய்யா சீவன்களைக் கொத்தி
நிலம்புரட்டி
வேட்டுத் துளைத்தசுவர் பூசி
கோப்புசமும்
கூரையும் புனைந்து
பெயின்றால் புதுசாக்கி
‘நாட்டிய தாராக்கள்’ நடனமிட
வரவேற்பு
மேளத்தால் விண்ணதிர
நாட்டின் இளவரசன்
புதியதொரு வாழ்கையினைத்
திறந்துவைத்துப் போகின்றான்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply