ஒவ்வொரு சொற்களுக்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு.
ஒவ்வொரு சொற்களுக்கும்
ஒவ்வொரு பொருட்களுண்டு.
“ஒருசொல் உடலென்றால்”
உயிர்அதன் பொருளென்பேன்.
ஒருசொல் விழி…என்றால்
ஒளிஅதன் பொருளென்பேன்.
இன்றுன் கவியை எத்தனையோ நாட்களின்
பின்தட்டிப் பார்த்தேன்.
பின்நோக்கி என்நினைவு
உன்வரியில் ஏறி..அன்றை என்ஊரைச் சுற்றிற்று!.
அன்றைய குண்டுகளின் அதிர்வும்,
காற்றோடு
பின்னிப் பிணைந்த
கந்தக நெடிப்பாம்பும்,
வீதிக்கு வீதி விளைந்த
மரணவீட்டு
ஓலப் பறையும்,
ஒன்றன்பின் ஒன்றாக…
நிவாரண வரிசையிலே
அன்றுநின்ற நம்மைப்போல்…
அவலத் துயருள் அகத்தைமீண்டும்
தோய்த்திற்று!
நீயந்த நாடகளிலே நின்றாய்
நெருப்பாக…
நானிருந்தேன் புகையா என்வீட டடுப்பாக…
ஈன நிலைகண்டு
எரிமலையாய் வெடித்தன்று
நீ…சொன்ன சொற்கள்
எனக்கோ கவிதைகளாய்
மாற அவற்றை மனம்பதித்தேன்!
நீ…வேள்வி
ஆகுதியில் வீழ்ந்தாய்!
ஆம்..இன்றும் நின்சொற்கள்
போர்வாளின் கூராய்த்தான்
உளத்தை அறுத்திருக்கு!
“அன்றைய உன்போன்ற அனேகரின் தீச்சொற்கள்
இன்றர்த்தம் இழந்து
வெறுஞ்சாம்பல் எழுத்தாச்சு…”
என்றன்று பிறவாத
இன்றை‘ஞானக் கொடுமுடிகள்’
சொல்லித் திரிகிறாராம்!
“எதையும் விவாதித்தே
எல்லைகளைக் கண்டு எழவேணும”; என்கிறாராம்!
உன்னுடைய கவிவரியை இன்றுரைத்தேன்:
என்..நாவே
புண்ணாக அதன்பொருட்தீ பொங்கி எரியுதடா!
மர்மம் விலகாதெம்
மண்ணினிடர் நீள்கையிலே….
“அர்த்தம் இழந்தன இன்றன்றைச் சொற்களெல்லாம்…”
என்றுதுள்ளும் கன்றுகளை
எண்ணமனம் பதறுதடா!