நிஜவெற்றி

வேலை கிடைத்ததென்று வேகப் புயலானாய்.
வேலை கிடைத்ததென்று
வெட்டிப் பிடுங்குகிறாய்.
வேலைக்கு நூறு சதவீத விசுவாசம்
கூட்டிப் பெருக்கிக் குத்தி முறிகின்றாய்.
வேலைகள் செய்கின்றாய் விதவிதமாய்.
புதுநுட்பம்
ஆயிரம் பயின்று அதிசயமாய் எழுச்சிகொண்டாய்!
வானை ஜெயிக்கின்றாய்.
வளங்கள் பெருக்குகிறாய்.
கோடி கோடியாகக் குவித்தே மிரட்டுகிறாய்.
வேலை கொடுக்கின்றாய் மூளைக்கு
அதைப்பிளிந்து
சாறெடுத்துக் குடித்துச் சக்திபெற்று
அடுத்தடுத்துச்
சாதனைகள் செய்கின்றாய்.!.
இதயம் ஒரு நுண்ணுயிர்போல்
வாடித் துடிக்கிறது!
அதன்துடிப்பைப் பாராமல்..,
எங்கும் அதன்விருப்பை வெறுப்பை
எதுங்கேளாமல்..,
ஆம் அதுவும் சொல்ல வருபவற்றைச்
செவிகொடாமல்..,
வேலையெதும் அதற்கு வழங்காமல்…,
உணர்ச்சியென்ன
கேடுகெட்டுப் போனாலும் கணக்கெடாமல்…,
அறிவைஆண்டு
சீறுகிறாய் எல்லையில்லா விசைகொண்ட
தோட்டாவாய்!
வீழ்த்துகிறாய்!
உன்முன் எதிர்ப்பட்ட அத்தனையும்
மேவுகிறாய்!
வாழ்வை வென்றுளாயா?
அறியேன்யான்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply