இன்று புதியது என்பது நாளைக்கு
இழிந்த பழசுதான்! எல்லோரும் போற்றிடும்
இன்றையின் நாக ரீகமே என்பது
இனிவரும் நாளில் அதரப் பழசுகாண்!
இன்றை நவீனம் நாளை மரபடா!
இன்றைய வேடம் நாளை சிரிப்படா!
இன்றை இளசு நாளை கிழடுதான்!
இன்றைய வாழ்வு நாளை பழிப்புகான்!
புதிது என்றுநாம் சொல்லிக் கொண்டாடையில்
புதிது பழசாகும்! பொருளுமே மாறிடும்.
எதுவும் புதிதல்ல எல்லாம் பழசெனும்
இயற்கை யதார்த்தம்! காலா வதியாகிப்
புதிது பழுதாகும்…புதுமை பழமையாய்ப்
போகும் யார்தாம் புதியவர் சொல்லிடும்?
உதயம் நித்தம் புதிதெனும் போதிலும்
உதயன் பழையவன்…உண்மையைத் தேறிடும்!
நேற்றெம் புதிய கவிதையோ இன்றைக்கு
நிறங்கள் மாறிப் பழசாகிப் போனது!
போற்றப்படும் இன்றைப் புதிய கவி…நாளை
புளித்துப் பழுதாகும்…நிச்சயம் தான் இது!
நேற்றைப் புதுக்கவி நாளை மரபதன்
நிரலில் போய்நிற்கும்! இந்த இயற்கையில்
தோற்றந்தான் புதிதென்றிடும் மாயமாம்!
சுழற்சி பழமையில் புதுமையும் செய்யுமாம்!