நிழலினிலே நிற்கையிலே நிழலின் நன்மை,
நிழலினது குளுமை மற்றும் நிழலின் மேன்மை,
நிழல் வெயிலைக் குடித்து இருள் பூசி வெந்து
நெருப்பு வெக்கை தனைத்தாங்கி அருளும் தன்மை,
நிழலின் ஈகம் அதன் பெருமை இவற்றைக் காணோம்!
நிழலென்ன நிழலென்று அலட்சியமாய்
நிழல்மடியில் ஆறி…களைப்பாற்றித் தூங்கி
நிழலைக் கணக்கெடாமற்தான் நாமும் வாழ்வோம்!
நிழலிருக்கும் வரை அதனின் அருமை எங்கள்
நினைவுக்குப் புரிவதில்லை! நிழலைப் பெற்ற
நிழல்மரங்கள் நிற்குமட்டும் அவற்றின் தேவை
நிச்சயமாய்த் தெரிவதில்லை! இரண்டும் இல்லாப்
பொழுதொன்றில் வெயில் வறுத்துப் பொரிக்கும் போதில்
பொரிந்து துடி துடித்தெலோரும் கதறும் போதில்
நிழலினருள் புரியும்…நிழல் மரத்தின் தாய்மை
நெருக்கங்கள் விளங்கும் இது தானெம் ஞானம்!