இருள்நகர்ந்து கவிவதுவாய், பனியின் மூட்டம்
எழுந்துவந்து மூடுவதாய், மயக்கம் சோர்வு
மருவி எமை விழுங்குவதாய், இடரும் துன்ப
வகைபலவும் அடிக்கடி வந்தென்னை மூடி
இரக்கமற்று வதைக்கும்! என் சுதந்திரத்தை,
இயங்குநிலை தனை, தடுத்தென் மனதை வாட்டும்!
வருந்தியுனை நேர்வேன்…சூரியனைப் போலே
வந்து…அனைத்தும் விரட்டி எனை உன்கண் மீட்கும்!
உன்கருணை ஒளி, வெப்பம் பட்டால் போதும்
உயிர்சிலிர்க்கும்! சுறுசுறுப்பு துணிவு வேகம்
மின்னேற்றினாற் போல என்னை மாற்றும்!
விழுந்த மனவாட்ட நாற்று பூத்துக் காய்க்கும்!
உன்னைநேர உடன்வந்து அணைத்து, உன்பொன்
உள்வீதி சுற்ற…ஆறுதலுந் தந்து,
இன்ப…திரு விழாவிலுனைக் கண்டால் செல்வம்
ஈரெட்டும் ஈந்து உன்வேல் என்னை காக்கும்!
நல்லூரின் பெருமைசொல்ல வார்த்தை இல்லை.
நல்லூரின் புகழ்பேசா வாய்கள் இல்லை.
நல்லூர் நம் நாட்டின் தமிழ்ச் சைவ மாண்பை
நற்பண்பைப் பறைசாற்றும் நவீன எல்லை.
நல்லூர் இவ் உலகில்வாழும் அடியார்க் கெல்லாம்
நற்கதியை இங்கிருந்தே நல்கும் மையம்.
நல்லூரெம் ஞானபலம்! அதன் நிழலில்
நானமர வாய்த்தவரம் எனக்குப் போதும்!