அனிதா

உன் அறிவின் ஆழம்,
உன் முயற்சி, உன் தகமை,
உன்னுடைய ஆற்றல், உனது அடைவு மட்டம்,
உச்சம்தான்….!
ஆனாலும் மூட்டை தினம் சுமந்தும்,
“பிச்சை புகினும் கற்கை நன்றே ” என்ற
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாத
ஆட்சியில்….
தரப்படுத்தி வாய்ப்பைப் பறித்தெடுக்கும்
கூட்டில்…சிறகொடிந்து குமுறினாய்!
அரசநீதி
பிழைக்கும்…மநுநீதி பிழைக்கா தென நம்பி
இளைய கண்ணகியாய்
ஏழ்மையெனும் ஒற்றை
சிலம்போடு வந்து சீறினாய் நீதிகேட்டு!
அதுவுமுனை ஏய்க்க
‘அரியலூர் அனிதா’ …நீ
விதியின் கயிற்றில்
சரண் புகுந்தாய்…மனமொடிந்து!
கோழையா நீ ?
மான மயிர்நீப்பின் உயிர்வாழா
மானானாய் !
அடிமை மனப்பாங்கில் “போடுவதைப்
போடென்று” ஏற்காத
புரட்சிப்பெண் நீயென்றாய்!
ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்பதற்கும்,
ஏழ்மைக் கனவு நனவாகா தென்பதற்கும்,
சான்றா நீ…. ?
‘ஸ்டெதஸ்கோப்’ மாட்ட வேண்டிய கழுத்தில்
தூக்கு கயிறுதொங்கத் தூண்டியதார்….?
மக்களாட்சி
ஓங்குதென்ற நாட்டின் ‘உண்மை’, ‘உயர்வு’ என்ன….?
பதிலானாய் !
கோடானு கோடிபேரின்
‘மனநீதி’ விழிக்கவைத்துப்
போனாய் !
என்னுறவை இழந்ததுபோல் புலம்புகிறேன் !
(ப்ளஸ் 2 தேர்வில் 1200க்கு 1176 புள்ளியும் 196.5 சராசரியும் பெற்று மருத்துவ பப்டிப்பை பெற நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்த அரியலூர் அனிதா என்ற ஏழ்மை மாணவிக்கான இரங்கல்)

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply