கடவுளையே விமர்சிக்கும் போது…அந்தக்
கடவுளையே மறுதலித்து ஒதுக்கும் போது
கடவுள்மேல் குறைகண்டு கொதிக்கும் போது
கடவுளிலே குற்றங்கள் சாட்டும் போது
கடவுளென்று ஒருவனில்லை என்று கூடக்
கதைப்பவர்கள் சுதந்திரமாய் உலவும் போது
அட…எனது கவிதைகளை மறுதலித்து
அலட்சியங்கள் செய்வதிலெப் புதுமை உண்டு?
கடவுளைப் போல் புதிர்தானே கவிதை? யாரும்
கண்டு இதுதான் என்று உறுதி யாக
முடிவுரைக்க இடந்தராது கவிதை! தாம்தாம்
முயன்று…கண்டபடி கவிதை இதுதான் என்று
முடிவுஞ் செய்யலாம்….கவிதை கவிதையாக
முன்னிற்கும்…என்கவியும் கடவுள் போலாம்!
கடவுளைப்போல்…எவரெதைத்தான் சொலினும்..எந்தன்
கவிதையென்றும் நிலைத்துவாழும்…அழிந்தி டாதாம்!