‘ஆட்டுக்கல் அம்மி’ தனில்அரைத்த
தோசை சம்பல்,
‘திரிகையிலே’ பயறு திரித்துசெய்த பலகாரம்,
‘மாற்றுலக்கை’ போட்டுரலில்
இடித்த அரிசிமா அப்பம்,
‘சுளகில்’ உமிபுடைத்து ‘அரிக்கன் சட்டி’யில் சிறுகல்
கிளைந்துமண் பானையிலே
காய்ச்சி வடித்தசாதம்,
சட்டிகளில் சமைத்தகறி,
அவைகாக்க வைத்த’உறி’,
மிஞ்சிய சோற்றில்…நீர் விட்டு
வெங்காயம்
பச்சைமிள காய் கடித்து
பகிர்ந்த காலைப் பழஞ்சோறு.
உலையிறக்க முன்…வடித்த கஞ்சித் தெளிவு,
அதில்
அரைஅவிந்த அன்னமிட்டு அருந்து(ம்)ருசி,
மச்சத்துக்
கூழோ தனி, மோர் மிளகாய் தயிர் வடக
‘ஆரதக்’ கறிசோறு.
‘சனி’ நல்லெண்ணையில் ஊறி
சூடு பறக்க முழுகி…ஊர்ச் சாவல் வெட்டி
அரைத்துக் குழம்புவைத்து
வறை சொதி பொரியலோடு
வயிறு புடைக்கஉண்ட விருந்து,
மாலைகளில்
கிட்டி ஊஞ்சல் பாண்டி கிளித்தட்டு எனமகிழ்வு
இரண்டு தேங்காய் திருவி
‘இரத்த வறுவலோடு’
இரவிற் சுவைத்த குழற் புட்டு.
தினம் எந்த
வெயில் மழைஎனினும்
விடிய…முதல் மாலை…ஈறாய்
துலா பட்டை யோடு தோட்டத் துரவுழைப்பு,
புகையிலைச் சுருட்டு,
போட்ட வெத்திலை பாக்கு,
‘பிளா’வில் உறுஞ்சிப்
பிரமித்த ஊர்க்கள்ளு,
கதையளந்த திண்ணை,
கலந்த நிலாமுற்றம்,
நதிமூலம் தேடி நடந்த வயல் கடல்கள்,
தொற்றும்நோய் தொற்றாநோய் தொடாது…
ஆரோக்யம்
பற்ற…நூறாண்டு பாறாமல் நீண்ட…ஆயுள்.
“வெளியுலகம் புரியாத போதும்”;
உறவு சுற்றம்
கனிந்து மகிழ்ந்து கலை….இசையில்
நனைந்தடைந்த
நிம்மதிசேர் தூக்கம்,
திருவிழா தொடங்கிவிட்டால்
ஆச்சர்ய ஆன்மீகம், அந்நாளில் இரவிரவாய்
பேச்சோடு கூத்து சின்னமேளம்
என மயங்கி
வாழ்ந்த பெருவாழ்வு…, இவை விற்று(விட்டு)
“யாமும்…இவ்
ஊரினது… மண்ணினது…
உருத்துடைய வம்ச…மைந்தர்
தாம்…என்றோம்!
நம்முகத்தைக் காப்பமென்றோம்!”
வாழ்கின்றோம்.