பூமியெனும் இறுவெட்டுச்
சுழலச் சுழலஇந்த
வானெங்கும் ஆகாசம் வனமெங்கும்,
மண்ணெங்கும்
ஓங்காரம்…இசையினது உச்சம் பிறந்திடுது.
இறுவெட்டில் ஏற்கனவே
ஏற்றிவைக்கப் பட்டதது.
இறுவெட்டில் எவராலே
ஏற்றிவைக்கப் பட்டதிது?
இந்த ஓங்கார இசைக்குள்
உலகிலுள்ள
சந்தங்கள் பாடல்கள்
சகலதும் அடங்கியதால்
இந்த மௌன இசையே எவராலும்
இசையமைக்க முடியா
இசையாய்ப் பரவிடுது!
பூமியெனும் இறுவெட்டாய்
பிறகோளும் நிலவுகளும்
தாமே தமைத்தாமே சுற்றிவர
வௌ;வேறு
ஓசை இசைகளிலே பிரபஞ்சம் மிதக்குதிப்போ!
பிரபஞ்சம் கூடஒரு
இறுவெட்டாய்ச் சுழல்கிறதா?
அதிலெழும்பும் இசையிலிந்தப்
‘பால்வீதி’ சிலிர்க்கிறதா?
“ஓசை ஒலியெலாம் ஆனாய் நீ”
என்றன்றே
பாடியநெஞ் சர்த்தத்தை
உணரநம்மால் முடிகிறதா?