சுடர்களின் காலங்கள்

சுடரொவொன்றும் சூரியனாய் சுடர்ந்த
தொரு காலம்!
“புதைந்த கனவொவொன்றும் போய்ச்
சுடரில் முகம் காட்டி
ஒளிருமெனும் நம்பிக்கை தனில்
உயிர்த்த தக்காலம்!
சுடர்களை மூழ்கடித்த தொடர்
வெள்ளத்தால் இருண்ட
யுகமொன்றில்….மின்மினிகள் போலச்
சுடர்களினை
அகக்கண்கள் மட்டுமே
காணவைத்த திடர்க்காலம்!
“சுடர்கள் நினைவுகளைச் சுமக்கும் கழுதைகள்….
நினைவுகளை நீக்க
கழுதைகளைக் கொல்க” என
சுடர்க்கழுதை பலதை தொலைத்தது
கடந்தகாலம்!
வெள்ளம் குறைந்து,
மிரட்டிய இருள்குலைந்து,
மனத் திரிகள் காய்ந்து,
உறைந்த நினைவு நெய்
உருகி வழிந்து, மீள
எரிப்பற்று நிலையடைந்து,
சுடர்கள் எரிய….
தொலைந்த முக விம்பங்கள்
சுடர்களில் தெரிய….
துளிர்த்தது இணக்ககாலம்!
“சுடர்களை சுடர்களாக ஒளிர விடுங்கள்” என்றும்,
“சுடர்கள் சுடர்களாகத் தொடர உதவும்” என்றும்,
“சுடர்கள்….பல தூறல் சூழ்ச்சிகளுள்
அடிபட்டே
அணையுமோ” என்றும், ஏங்கி
அழுகிறது நிகழ்காலம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply