மழைப் பேச்சு

ஓயாமல் பகலிரவாய் உளறிடுது வானமழை!
கோபத் துடனெனினும் குளிராய்த்தான்
ஊரினது
காது செவிடுபட
கத்திக்கொண் டிருக்குதின்று!
யார் கேட்பார் என்ற கவலையற்று
வாய் உழைய
ஓர் ‘சில் வண்டாய்’ இடைவிடா திரைகிறது!
வீடுகளில் ஜன்னல் கதவுகளில்
துளி எச்சில்
மோத முழங்கிடுது முறைத்து!
கண்களிலே
கோபமின்னல் வெட்டித் தெறிக்கக்
குமுறி …எங்கோ
ஏதோ ஓர் மேசையில் இடித்தும்
முழங்கிடுது!
“கேட்கோமோ” எனக்காத்துக் கிடந்து
நனைந்து தோய்ந்த
அயலெல்லாம்… மழைப்பேச்சுக்கு
அஞ்சி வீட்டுள் ஒதுங்க…,
வெயிலினது திட்டைமட்டும் வேண்டி
வெடித்துலர்ந்து
உயிர்வரண்ட மண்ணும்
உதிர்ந்து காய்ந்த மரம் செடியும்
மேனியெல்லாம் காதாக்கி
மழைப்பேச்சைப் பருகி நிற்க…,
ஓரிரு சொல் கேட்டே உயிர்க்கத்
தவித்த வயல்
நாற்றழுகி முளை அழுகி ஜலசமாதி ஆகிடுது!

ஓயாத பேச்சு;
பேசும் அதன் வார்த்தை வெள்ளம்
ஊரை ஒழுங்கைகளை
உள்ள குளம் கரையை
தோட்ட வெளியை துரவுகளை
மேவி….வீட்டுள்
ஏறி இரைந்துயர….
இதன் பேச்சால் அதிர்ந்த ஓட்டுக்
கூரைகளி னூடும் துளிச் சொற்கள் ஒழுகிடுது!
ஊரே திகைத்து உறைந்து
நடுங்குகையில்
ஓய்வொழிச்சல் இல்லாமல்,
உண்ணா துறங்காமல்,
“வாய் கிழிய வானம்
வாரக் கணக்காகப்
பேசட்டும் ” எனவிட்டால் பிறகு எது மிஞ்சும் ?
நாம் அதனை எதிர்த்து
அதைப்போல் முழங்குதற்கோ
வாதம் புரிந்து அதைத் தடுத் தகற்றுதற்கோ
வார்த்தையற்றோம், ஞானமற்றோம்,
எம்மால் எது இயலும்?
ஊறி நனைந்தெங்கோ….
‘கொடுகியுள்ள கோழி’ யான
சூரியனைக் கூட்டிவந்து
சூடேற்றிச் சுட்டாற் தான்
வான மழைப் பேச்சின் வாய் ஓயும்….
அதைச் செய்வோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply