வறுமை

படைப்புக்கள் தாம் எதையும் பேசவேண்டும்.
பாடவேண்டும்.
வெடித்துச் சிரிக்கவேண்டும்.
வெவ்வேறு இரசங்களுடன்
ஒருஉணர்வை, ஏதோஓர் உண்மையை,
ஓர் சம்பவத்தை,
குறிப்பால் உணர்த்தியேனும்
ஏதோ ஒரு பயனை,
நாமடையச் செய்யவேண்டும்.
ஆனாலோ….
‘பல’ கண்முன்
வாடி இறுகி வரண்டுறைந்து
அசைவு உணர்ச்சி
ஏதுமற்று…அழகு இனிமை மணம் உயிர்ப்பு
யாதுமற்றுக்…கல்லாய்ச்
சடமாய், பலசமயம்
மூச்சற்ற சடலங்கள் போலாய்,
அசைவோடு
கூச்சநாச்சம் அற்று
குலம் சமூகம் நாடு உலகம்
எதற்கும் பயனிலாது சிலதடவை
அழுகிநாறி
மூக்கைச் சுளிக்கவைத்து
மூலையெங்கும் குவிந்துளன!
படைப்பு…பண்ண வேண்டியதைப்
பண்ணா திருப்பதனால்,
படைப்பு செய்ய வேண்டியதைச் செய்ய
முடியாததனால்,
படைத்தவர்கள் நொந்து….
பலவாறு… முடிவற்ற
அடைமழைபோல் ஓயா அலைகள்போல் ஏதேதோ
பேசித்தம் ‘படைப்பை’
பிரபலப் படுத்திவிட
போராடிக் கொண்டுள்ளார்!
“புதுமைசெய்தோம்” என்று ‘உண்மை-
தேர்ந்தும் தேராதார்’ போலக்
குழுக்குழுவாய்
வாதாடி… “மாறும் வரலாறு” என்கின்றார்!

பேசாப் படைப்புகளும்
பேசும் படைப்பாளிகளும்
ஏராளம் ஆக….எவரும் கணக்கெடுக்காச்
சூழல் வெறுமையாச்சு!
இலக்கியம் வறுமையாச்சு!!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply