கோடி கோடி திருடும் பெரும் குடி
கோட்டுச் சூட்டு வக்கீல் வழக்கென
நாடே கண்டு நகைத்துப் பழிக்கவும்
“நாங்கள் புனிதர்தாம்” என்பதாய்…ரோசமோ
சூடு சுரனையோ அற்றுப் பெயர் புகழ்
தொலைத்திடா தெழும்! நீதியும் அன்னவர்
போடும் வேடம் புரிந்தும் புரியாததாய்
பொய்க்கு உதவிடும்! புவியோ மறந்திடும்!
கொத்து அரிசி திருடி..,.பசியெனும்
கொடிய; வயிற்றுள் கிடந்தது; அடிக்கடி
கொத்தச் சீறியே வாய்வழி வந்திடும்
பாம்பின் வாயில் தவளைகள் போல் கொட்டி..,
நித்தப் பசியினை அல்ல, அச் சில
நிமிடப் பசியை தணிக்க முயன்றோனை…..
சுத்தி வளைத்திந்தப் பேய்ப்புவி கொன்றிடும்!
சுதந்திரமாக திருட்டும் தொடர்ந்திடும்!