சாதனை எதையுமே சத்தியமாய் நாம் புரியோம்.
சாதனைக் கருகில்
சாணளவும் நாம் செல்லோம்.
சாதனைக்கு ஏதும் சாதகங்கள் நாம் செய்யோம்.
சாதனையை வேறாரோ செய்தால்
“கடவுளர்கள்
தாமவர்கள்” என்போம்.
தப்பித் தவறி நம்மில்
சாதனையை ஒருவன்
சாத்தியப் படுத்தினாலோ…
சாதனையைத் தாண்டி சரித்திரம் படைத்தாலோ…
சாதனையின் எல்லைகளைத் தகர்த்தாலோ…
அன்னவனின்
சாதனையைப் பாரோம்!
அவனெந்தச் சமூகத்தைச்
சார்ந்தோன் என்றாராய்வோம்!
அவனினது பின்னணியைப்
பார்த்து…உலகம் பார்த்து வியந்த…அவன்
சாதனையை அற்பமென்று
சாதா ரணமாய்…அச்
சாதனையைக் கடப்போம்! சம்பந்தம் இல்லாத
வேறெதையோ முடிச்சிட்டு…
விசமமாய் விமர்சிப்போம்!
ஏற்கோம் நாம் எம்மவனை…இதயமெல்லாம்
காழ்ப்போடு
“ஏது இதுபெரிய சாதனை” எனக்கூடப்
பேசி…பிறன்பெருமை பேசி…
எங்கள் சிறுமைசொல்வோம்!
சாதனையை எங்கள் ‘சாதனையால்’ மறுதலிப்போம்!
சாதனையால்….இத்தகைய சாதனையால்…
உண்மையான
சாதனைக்குக் களங்கமில்லை!
நம் களங்கம் பெருக்குகிறோம்!