திருவா சகத்திற்கு உருகா தார்கள்
திளைத்து…. வாசகம் எதற்கும் உருகார் என்பார்!
திருவா சகம்தன்னை இசைத்தேன் சேர்த்து
சிந்தை செயல் கெடாது….பலர் இலயிக்க வைத்தார்!
திருவா சகப்பாடல் அனைத்தும் கல்லில்
செதுக்கி கால வெயில் மழையில் கரைந்தி டாத
அரண்மனையில் அரியணையில் ஏற்றி விட்ட
அதிசயத்தைக் கண்டு மனம் வியந்தோம் இந்நாள்!
பளிங்கினிலே பொறித்த ‘வாத வூரன்’ பாக்கள்
பார்ப்போரின் மனச் சுவரில் பதிந்து கொள்ளும்.
எழுந்த கற் தேர், பிரதான கோவில், பாவை
இரசிக்கின்ற லிங்கங்கள், யாவும் ஞான
உலகை நாம் காணவைக்கும். “கருங்கற் தாளில்
உளி சமைத்த கவி” இதெனும் உள்ளம். ‘நாவற்
குழி’யும் ‘மகா பலிபுரம்’ போல் மகிமை நாளை
கொள்ளும்! இதெம் தமிழ் சைவப் பெருமை சொல்லும்!
குருந்தமர நிழலில் ஞானம் போதித் திட்ட
குரு தட்ஷணாமூர்த்தி கோயில் கொள்ள…
கருங் கற் தேர் தனில் வாத வூரன் முக்கண்
முதல்வனுடன் வீற்றிருக்க…கருங்கல் லிங்கம்
ஒரு நூற்று எட்டும் காவல் காத்து நிற்க…
உயர் கோவில் விமானத்தில் நூற்று எட்டு
சிறுலிங்கம் நிமிர, திருவாச கச் சீர்
அரண்மனையும் சிறக்கும் வரலாறு செப்ப!
யாராரோ எதற்கோ அரண்மனைகள் மண்ணில்
அமைத்ததுண்டு….தமிழ் சைவ ஞானத் தேறல்
மாணிக்க வாசகரின் வரிக ளுக்கு
மனை சமைத்த கதை உலகில் எங்கே உண்டு?
ஆர்வலர்கள் நிலம் பொருளும் அருள…எங்கள்
‘ஆறு திரு முருகன்’ நட்ட எழிற் கற் சோலை
காலத்தை வெல்லும்! யாழ்ப் புகழைச் சொல்லும்…
காக்கின்ற நிழலாகும்…செழிக்கும் என்றும்!