வாய்ச்சொல்லில் வீரர்களால் மாயும்… தமிழ் சைவ
நோய் தீர்க்க நித்தநித்தம் நோன்பிருக்கும் –‘ஆறு
திருமுருகன்’….செல்வர் ‘மனோமோகன்’ சேர்ந்து
வரந்தந்தார் உய்ததெங்கள் வாழ்வு!
திருவா சகத்துக்கு தேர்ந்தகருங் கல்லில்
அரண்மனை செய்தார்! அரணும் —பிறரெங்கும்
காணா வகைஅமைத்தார்! காலம் கடந்து ‘தெய்வ
வாசகமும்’ ஆளவைத்தார் ஆம்!
குருந்த மரக்கீழ் குருதட்ஷணா மூர்த்தி,
திருத்தேரில் வாதவூரன், சேவை –புரிகின்ற
நூற்றெட்டு லிங்கங்கள், நுட்பமாய்ச் சிற்பவேலை,
ஆட்பட வைத்த அழகு!
கல்லில் கலைவண்ணம் கண்டோம்! கவிவண்ணம்
கல்லிலின்று ‘நாவற் குழி’ காண —சொல்செல்வர்
முன்மொழிந்தார்! காணி,முதல் தந்தோர் வழிமொழிந்தார்!
சிந்துமென்றும் ஞானமெனும் தேன்!